எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருக்கும் மக்கள்தான் வாரிசு.. முதல்வர் பேச்சு
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு வாரிசு கிடையாது அவர்கள் இருவருக்கும் மக்கள்தான் வாரிசு என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
சேலம், டிச-18

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி வாணியம்பாடியில் அமைக்கப்பட்டுள்ள அம்மா மினி கிளினிக்கை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி இன்று திறந்து வைத்து பேசியதாவது:
தமிழகம் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்கு மருத்துவ சேவை அளிக்க வேண்டும் என்பதற்காக ‘அம்மா சிறு மருத்துவமனைகள்’ தொடங்கப்பட்டுள்ளன. கிராம மக்களுக்கு காய்ச்சல், தலைவலி, சிறிய நோய்கள் ஏற்பட்டால் உடனடியாக ‘அம்மா சிறு மருத்துவமனைகளை’ நாடி குணப்படுத்திக் கொள்ளலாம். கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்காக மாவட்டந்தோறும் நேரில் சென்று ஆய்வுக்கூட்டம் நடத்தி வருகிறேன்.
வீரபாண்டி பிரிவில் ரூ.45 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் விரைவில் பயன்படுக்கு வரும். பனமரத்துப்பட்டி, இளம்பிள்ளை பகுதி மக்களுக்கு காவிரி குடிநீர் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும்.
எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்டு, ஜெயலலிதாவால் வளர்க்கப்பட்ட இயக்கம் அதிமுக. அவர்கள் வழியில் அமைந்த இந்த அரசு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் செயல்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர்களான எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கும் வாரிசு கிடையாது. அவர்கள் இருவருக்குமே தமிழக மக்கள்தான் வாரிசு. அதிமுக அரசு நேரடியாக மக்களோடு பேசு வருகிறது. பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டங்களுக்கு அதிமுக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
அதிமுக மக்களுக்கு உழைக்கும் கட்சி. இதில் விசுவாசமாக இருந்து உழைப்பவர்களுக்கு பதவிகள் தேடி வரும். காணொலி முறையில் பேசி வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரம் இல்லாமல் அரசை விமர்சித்து வருகிறார். மக்களை சந்திப்பது பெரிதா அல்லது வீட்டில் உட்கார்ந்துகொண்டு பேசுவது பெரிதா?
என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.