வலுப்பெறும் வடகிழக்கு பருவமழை.. இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

சென்னை, டிச-18

தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை நகர், புறநகரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.

தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட 9% அதிகமாக பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதிகபட்சமாக கடலூர் புவனகிரியில் 11, பரமக்குடி, பரங்கிப்பேட்டையில் தலா 7 செ.மீ மழை பதிவானது. இளையான்குடி, குடவாலில் தலா 6, அய்யம்பேட்டை, மயிலாடுதுறையில் தலா 5 செ.மீ மழை பதிவானது.

இரு வாரமாக குறைந்திருந்த, வடகிழக்கு பருவ மழை நேற்று முதல் வலுப்பெற தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அரசு அறிவுறுத்தி உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், வடகிழக்கு பருவ மழை நவம்பரில் துவங்கி பலமாக கொட்டித் தீர்த்தது. அத்துடன் வடக்கு மற்றும் டெல்டா மாவட்டங்களை ‘நிவர்’ மற்றும் ‘புரெவி’ என இரண்டு புயல்கள் தாக்கின. இதனால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த சேதம் ஏற்பட்டது. அதற்கான மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் இன்னும் நிறைவேறாத நிலையில் உள்ளன. மழையின் தீவிரம் சற்று குறைந்திருந்தது.

இந்நிலையில் தமிழக கடலோர பகுதிகளை ஒட்டி, வளிமண்டல சுழற்சி நிலவுவதால், பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 15ம் தேதி முதல் டெல்டா மற்றும் வட மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம், கடலுார், கள்ளக்குறிச்சி, பெரம்பலுார், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில், கன மழை கொட்டியது. விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியில், 17 செ.மீ., மழை பெய்து உள்ளது. இந்த திடீர் மழையால் விழுப்புரம் மாவட்டத்தின் பல கிராமங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சில இடங்களில் ஏரி, குளங்களின் கரைகள் உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *