மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50% கட்டணச் சலுகை.. ஏர் இந்தியா அதிரடி அறிவிப்பு

உள்நாட்டு விமானப் பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50 சதவீத கட்டணச் சலுகை வழங்கப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

டெல்லி, டிச-18

கொரோனா வைரஸ் பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவதால், நாடு முழுவதும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, விமான போக்குவரத்துக்கும் அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, ஒரு விமானத்தில் 80 சதவீத பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதி அளித்துள்ளது. இதனால் விமான போக்குவரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனிடையே விமான பயணிகளை கவரும் வகையில் ஏர் இந்தியா புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி நாட்டின் மூத்த குடிமக்களுக்கு விமானக் கட்டணத்தில் 50% வரை கட்டணச் சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

பயணம் மேற்கொள்ளும் நாளில் 60 வயது நிறைவடைந்தவராக இருத்தல் வேண்டும். உள்நாட்டு பயணம் மேற்கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்றும் ஏர் இந்தியா நிறுவனம் கூறியுள்ளது. பன்னாட்டு சேவைகளுக்கு இந்த சலுகையை கோர முடியாது என தெரிவித்துள்ளதுடன், சலுகை பெறும் மூத்த குடிமக்கள் எக்கனாமிக் வகுப்பில் மட்டுமே பயணிக்க முடியும் என்றும் கூறப்பட்டுள்ளது.

பயணம் மேற்கொள்ளும் நாளில் இருந்து 3 நாட்களுக்கு முன்னதாக டிக்கெட் புக் செய்ய வேண்டும், 60 வயது பூர்த்தியடைந்ததற்கான சான்றாக ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது ஏர் இந்தியா வழங்கியுள்ள மூத்த குடிமக்களுக்கான அட்டை உள்ளிட்ட ஏதேனும் ஒன்றை பயன்படுத்தலாம் என கூறியுள்ளது.

மேலும், பயணம் மேற்கொள்ளும் நாளன்றும் 60 வயது பூர்த்தியடைந்ததற்கான சான்றுடன் செல்ல வேண்டும், இல்லையென்றால் பயணத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் ஏர் இந்தியா தெளிவாக கூறியுள்ளது. செக் – இன் செய்யும்போது அடையாள அட்டை காண்பிக்காத மூத்த குடிமக்கள் பயணம் மேற்கொள்ள அனுமதி மறுப்பதுடன், டிக்கெட் கட்டணமும் திருப்பித் தர மாட்டாது என ஏர் இந்தியா கூறியுள்ளது. 50 சதவீத டிக்கெட் குறைப்பு என்பது விமானக் கட்டணத்தின் அடிப்படை கட்டணத்தில் இருந்து மட்டுமே சலுகை வழங்கப்படும். வரி உள்ளிட்ட இதர கட்டணங்கள் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும், ரீ பன்ட் விதிமுறைகளின்படி மட்டுமே பணம் திருப்பி அளிக்கப்படும் என்றும் ஏர் இந்தியா கூறியுள்ளது. சிறுவர்களுக்கு எந்த கட்டண சலுகையும் அறிவிக்கவில்லை. 2 வயதுக்கும் குறைவாக உள்ள ஒரே ஒரு குழந்தையை மட்டும் விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *