வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும்.. மு.க.ஸ்டாலின்
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் வரை போராட்டம் தொடரும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை, டிச-18

வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னை, புதுச்சேரியில் திமுக, தோழமைக் கட்சிகள் உண்ணாவிரத போராட்டம் நடத்துகின்றனர். டெல்லியில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு ஆதரவாக வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் போராட்டத்தில் தோழமை கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். திமுக, தோழமைக் கட்சிகளின் எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோரும் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். திமுக, காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பச்சை நிற மாஸ்க் அணிந்து உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். விவசாயிகளை வஞ்சிக்கும் சட்டங்களை திரும்ப பெறு என்று அச்சிடப்பட்ட மாஸ்க்குகளை தலைவர்கள் அணிந்துள்ளனர். வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன், திருமாவளவன், வேல்முருகன், கே.வி.தங்கபாலு, கொங்கு ஈஸ்வரன், ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
விவசாயிகளின் நலன்களை பற்றி சிந்திக்காமல் கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. கொரோனா தொற்று காலத்தை சாதகமாக பயன்படுத்தி அவசர, அவசரமாக வேளாண் சட்டங்களை இயற்றி விவசாயிகளை துன்படுத்தி உள்ளது. இதனை எதிர்து கடந்த 15 நாள்களுக்கு மேலாக தேசிய தலைநகர் டெல்லியில் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகள் குடும்பம் குடும்பமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளின் போராட்டத்தால் டெல்லி கொதித்து கொண்டிருக்கிறது. அறவழியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளை மத்தியில் ஆளும் பாஜக அரசு தேச விரோதிகள் என்று கூறி வருகிறது.
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் மோடி தலைமையிலான பாஜக அரசு, யாரை காப்பாற்ற இந்த வேளாண் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பிய ஸ்டாலின், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் தேவையில்லை. அதனை முழுவதுமாக திரும்பப் பெற வேண்டும். வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை போராட்டம் தொடரும்
என்று ஸ்டாலின் கூறினார்.