அரசு மருத்துவர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்: ஸ்டாலின்
சென்னை .அக்டோபர்.25
போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊதிய உயர்வு, மருத்துவர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். உயிர்காக்கும் அவசர கால சிகிச்சை பிரிவு மற்றும் காய்ச்சல் பிரிவு தவிர மற்ற அனைத்து சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்று உள்ளனர்.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று விடுத்துள்ள அறிக்கையில்,
20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை போராட்டக் களத்திற்கு தள்ளிவிட்டிருக்கும் அதிமுக அரசின் செயல் கண்டனத்துக்குரியது.
அரசு மருத்துவமனைகளையே நம்பியிருக்கும் லட்சக்கணக்கான உள் நோயாளிகளுக்கும், ஏற்கனவே அறுவை சிகிச்சைக்கான தேதி குறிக்கப்பட்டவர்களுக்கும் ஏற்படும் கடுமையான பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை அமைச்சரோ, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ கண்டு கொள்ளவில்லை என்பது மிகுந்த கவலையளிப்பதாக உள்ளது.
“டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்போம்” என்று மருத்துவர்கள் கூறியிருப்பது ஒரு வகை ஆறுதல் என்றாலும், டெங்கு, பருவமழை தொற்று நோய்கள் பரவும் நேரத்தில் இது போன்றதொரு போராட்டம் வேதனையான ஒன்று .
மருத்துவர்கள் போராட்டம் குறித்து விவாதித்து முதலமைச்சர் ஏன் பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை? “மக்கள் எக்கேடு கெட்டால் என்ன? என்று முதலமைச்சரும், அமைச்சர்களும் அமைதி காப்பதுதான் அதிமுக அரசின் நிர்வாக லட்சணமா? போராட்டத்தில் ஈடுபட்டடுள்ள அரசு மருத்துவர்களை முதலமைச்சர் உடனடியாக அழைத்துப் பேச வேண்டும், உயிர் காக்கும் பணியில் இருக்கும் மருத்துவர்கள் இது போன்று “வேலை செய்ய மாட்டோம்” என்ற போராட்ட முறையைக் கைவிட்டு, முதலமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தி, தங்களது நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்ய வேண்டும் என்று ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.