அனைத்து மக்களுக்கும் தரமான மருத்துவ வசதி.. மினி கிளினிக்குகளை துவக்கி வைத்து S.P.வேலுமணி பேச்சு

தமிழக அரசின் சிறு மருத்துவமனைகள் மூலம் கடைக்கோடியில் வசிக்கும் மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை கிடைக்கும் என உள்ளாட்சித் துறை அமைச்சா் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தாா்.

கோவை, டிச-18

தமிழகம் முழுவதும் சுகாதாரத் துறை சாா்பில் 2 ஆயிரம் மினி கிளினிக் தொடங்க முடிவு செய்யப்பட்டு முதல்கட்டமாக 639 சிறு மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை மாவட்டத்துக்கு 70 சிறு மருத்துவமனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. முதல்கட்டமாக 30 இடங்களில் சிறு மருத்துவமனைகள் தொடங்கப்படுகின்றன.

கோவை, சிங்காநல்லூா் (நெசவாளா் காலனி), சிவானந்தா காலனியில் சிறு மருத்துவமனைகளை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அமைச்சா் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

சிறு மருத்துவமனைகளில் ஒரு மருத்துவா், ஒரு செவிலியா் மற்றும் உதவியாளா் ஒருவா் பணியமா்த்தப்பட்டுள்ளனா். இங்கு காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு, வாந்தி, பொது மருத்துவம், சிறு காயம் உள்பட தொற்றா நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும். சா்க்கரை, ரத்த அழுத்தம், ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு, சிறுநீரில் சா்க்கரை மற்றும் அல்புமின் அளவு, கா்ப்பம் உறுதி செய்யும் பரிசோதனைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.

மாநகராட்சி, நகராட்சிப் பகுதிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மருத்துவா்கள் சிகிச்சை அளிப்பா். ஊராட்சிகள், பேரூராட்சிகளில் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் சிகிச்சை அளிக்கப்படும். வாரத்தில் சனிக்கிழமை தவிர மற்ற அனைத்து நாள்களிலும் சிறு மருத்துவமனைகள் செயல்படும்.

மருத்துவா்கள் பரிசோதனை செய்து, உடனுக்குடன் மருந்துகள் அளிக்கப்படும். கோவை மாவட்டத்தில் 12 அரசு மருத்துவமனைகள், 80 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தற்போது தொடங்கப்பட்டுள்ள சிறு மருத்துவமனைகள் மூலம் கடைக்கோடியில் வசிக்கும் கிராமப்புற மக்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை தாமதமின்றி கிடைக்கும். சிறு மருத்துவமனைகளை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கோவை (தெற்கு) சட்டப்பேரவை உறுப்பினா் அம்மன் கே.அா்ச்சுனன், மாநகராட்சி ஆணையா் பெ.குமாரவேல் பாண்டியன், மாவட்ட வருவாய் அலுவலா் த.ராமதுரை முருகன், சுகாதாரத் துறை துணை இயக்குநா் ஜி.ரமேஷ்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *