தமிழகத்தில் டிச.19ம் தேதி முதல் திறந்தவெளியில் அரசியல், மத கூட்டங்கள் நடத்த அனுமதி

தமிழகத்தில் டிசம்பர் 19ம் தேதி முதல் திறந்த வெளியில் அரசியல், மத கூட்டங்களை நடத்தலாம் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். திறந்த வெளியில் 50% வரை பங்கேற்பாளர்கள் பங்கேற்று அரசியல், விளையாட்டு, மத கூட்டங்களை நடத்தலாம் என அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை, டிச-16

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது;-

கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் 25.3.2020 முதல் ஊரடங்கு உத்தரவு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

மாண்புமிகு அம்மாவின் அரசு, இந்த நோய்த் தொற்றிலிருந்து மக்களை காத்து அவர்களுக்கு உரிய நிவாரணங்களை வழங்கி, முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் சிறப்பான செயல்பாட்டினாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பினாலும் தான் நோய் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ளரங்கு கூட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி, திறந்தவெளியின் அளவிற்கேற்ப சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் அதிகபட்சம் 50 சதவிகித அளவிற்கு மிகாமல் பங்கேற்பாளர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், விளையாட்டு, கல்வி, கலாச்சார, பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் 19.12.2020 முதல் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல்துறை ஆணையர் அவர்களிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம். பொதுமக்கள் வெளியே செல்லும்போதும், பொது இடங்களிலும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொதுமக்கள் வீட்டிலும், பணிபுரியும் இடங்களிலும் அடிக்கடி சோப்பை பயன்படுத்தி கை கழுவியும், சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடித்தும், அவசிய தேவை இல்லாமல் வெளியில் செல்வதைத் தவிர்த்தும், அரசுக்கு முழு ஒத்துழைப்பு நல்கினால்தான், இந்த நோய்த் தொற்றுப் பரவலை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியும். எனவே, பொது மக்களின் நலன் கருதி, உங்கள் அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்திற்கும் பொதுமக்கள் தொடர்ந்து முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *