முதல்வர் பழனிச்சாமியை சந்தித்தது ஏன்? புகழேந்தி

சேலம்.அக்டோபர்.25

அமுமுகவின் தினகரன் மீது அதிருப்தி தெரிவித்து வரும், புகழேந்தி, சேலத்தில் இன்று முதலமைச்சர்  பழனிச்சாமியை சந்தித்துப் பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

 அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அதிருப்தி நிர்வாகியான பெங்களூரு புகழேந்தி டிடிவி தினகரனுக்கு எதிராக செயல்பட்டு வருவதோடு, வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இந்நிலையில்,   முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை புகழேந்தி சந்தித்தது குறித்து அரசியல் வட்டாராத்தில் பல்வேறு ஊகங்கள் வெளியாகின.  இகு குறித்து சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, தீபாவளிக்காக சேலம் வந்தேன். எனது மாமியார் வீடு சேலத்தில் உள்ளது. சேலம் வந்ததால், முதலமைச்சர் பழனிச்சாமி இல்லத்துக்குச் சென்று அவரை சந்தித்து, இடைத்தேர்தல் வெற்றி குறித்து நெஞ்சார வாழ்த்தினேன்.

முதலமைச்சர் பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தமிழகத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மாபெரும் இமாலய வெற்றியை பெற்றுள்ளது. அதிமுக பெற்ற வெற்றிக்காக நெஞ்சார வாழ்த்த வந்தேன். கட்சியில் சேர வரவில்லை என்று கூறினார்.

மேலும், சசிகலா ஜெயிலுக்குப் போகும் போது ஆட்சி, அரசு அதிகாரம் மற்றும் கட்சியை முதலமைச்சர் பழனிச்சாமியிடம் ஒப்படைத்துவிட்டுப் போனார். 

கட்சிக்கும், ஆட்சிக்கும் எந்த குந்தகமும் இல்லாமல் வீறு நடை போடுகிறார்கள் பழனிச்சாமி தலைமையிலான அதிமுகவினர் என்று புகழேந்தி பாராட்டினார்.

அதிமுகவில் இணைவதாக இருந்தால் உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் சேர்வேன். முதலமைச்சர் பழனிச்சாமி, 35 ஆண்டுகாலமாக எனது நண்பர். இப்போதுவரை  அமமுகவில்தான் இருக்கிறேன். அதிமுகவில் சேர்வதாக இருந்தால் உங்களுக்கு சொல்லிவிட்டுத்தான் சேர்வேன் என்று புகழேந்தி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *