சென்னை ஐஐடியில் மேலும் 79 பேருக்கு கொரோனா; பாதிப்பு 183 ஆக உயர்வு

சென்னை ஐஐடி கல்வி நிறுவனத்தில் மேலும் 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு 183 ஆக உயர்ந்துளளது.

சென்னை, டிச-15

கொரோனா தொற்று பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் இன்னும் திறக்கப்படவில்லை. கலை அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு கடந்த 7-ந்தேதி வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி அளித்தது.

இதைத் தொடா்ந்து சென்னை ஐஐடியிலும் இறுதியாண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் விடுதிகளில் தங்கி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஐஐடியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஏற்கெனவே 104 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் 79 பேருக்கு தொற்று உறுதி ஆகியுள்ளது.

இதையடுத்து மொத்த பாதிப்பு 183 ஆக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், மாநகராட்சி துணை ஆணையர் ஆல்பி ஜான்வர்கீஸ், ஐ.ஐ.டி. இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி ஆகியோர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

மாணவர்கள் தங்கி இருந்த விடுதி, உணவு அறை ஆகியவற்றை பார்வையிட்டனர். மேலும் கொரோனா பாதுகாப்பு உடையுடன் கிங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர்களையும் அவர் சந்தித்து பேசினார்.

ஐ.ஐ.டி. வளாகத்தில் உணவு சாப்பிடும் கூடத்தில் மாணவர்கள் ஒரே நேரத்தில் கூடியதன் மூலம் நோய் தொற்று பரவி இருக்க வாய்ப்பு உள்ளது. நேற்று ஒரேநாளில் 539 பேருக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டது.விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் மட்டுமின்றி அனைத்து மாணவர்களும் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுவாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் இருந்தவர்கள், தொடர்பில் உள்ளவர்களுக்கு பரிசோதனை செய்வது வழக்கம்.

ஆனால் இந்த சம்பவத்தில் ஐ.ஐ.டி. வளாகத்தில் உள்ள அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. மாணவர்கள், பேராசிரியர்கள், காவலாளிகள், விடுதி பணியாளர்கள் என அனைவரும் இதில் அடங்குவார்கள். நேற்று எடுக்கப்பட்ட இந்த சோதனையில் மேலும் 79 பேருக்கு தொற்று உறுதியானது. இதுவரையில் 183 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐ.ஐ.டி. விடுதி கேண்டீன் தொழிலாளி மூலம் தொற்று பரவி உள்ளது. இதனால் அனைத்து மாணவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

விடுதிகள், கல்லூரிகள், மேன்சன் போன்றவற்றில் தங்கி இருக்கும் மாணவர்களையும் பரிசோதனை செய்கிறோம். முக கவசம் அணியாமல் இருந்ததற்கு ஐ.ஐ.டி. சம்பவம் ஒரு பாடம்.அனைவரையும் கொரோனா மருத்துவமனையில் மருத்துவ குழுக்கள் அமைத்து கண்காணித்து வருகிறோம். உணவு வினியோகத்தின் மூலம் தொற்று பரவி இருக்கலாம் என்று கருதுகிறோம்.இதனால் பொது இடத்தில் உணவு வழங்காமல் மாணவர்கள் தங்கி இருக்கும் அறைக்கே உணவை வினியோகிக்க உயர்கல்வி துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கல்லூரிகளில் கூடும் இடங்கள், ஆய்வகங்கள் போன்றவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *