கொரோனா அச்சுறுத்தல்.. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் ரத்து – மத்திய அரசு அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடத்தப்படாது, 2021-ம் ஆண்டு ஜனவரியில் பட்ஜெட் கூட்டத் தொடரோடு இணைந்து நடத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி, டிச-15

இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தனித்தனியே கடிதம் எழுதி, குளிர்காலக் கூட்டத்தொடர் நடத்தமுடியாத சூழலுக்கு வருத்தம் தெரிவித்து, கொரோனா சூழலை கூறி விளக்கியுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

டெல்லியில் குறிப்பாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. அதிலும் குளிர்காலத்தில் கொரோனா வரைஸ் பரவலைக் கட்டுக்குள் வைப்பதும், நடவடிக்கைகள் எடுப்பதும் முக்கியமானவை. தற்போது டிசம்பர் மாதத்தில் நடுப்பகுதியில் இருக்கிறோம், கொரோனா தடுப்பு மருந்தும் விரைவில் கிடைத்துவிடும் சூழலும் இருக்கிறது.

தற்போது டெல்லியில் கொரோனா வைரஸ் பரவல் இருக்கும் சூழலில் நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களிடம் பேசியபோது, அவர்கள் கொரோனா வைரஸ் பரவலைக் காரணம்காட்டி, கூட்டத்தொடரில் பங்கேற்க முடியாத நிலையைக் கூறி கவலை தெரிவித்தார்கள்.

ஆதலால், அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரை மிக விரைவாக நடத்த அரசு விருப்பமாக இருக்கிறது, அதாவது கொரோனா வைரஸ் பரவல் சூழலை மனதில் கொண்டு பட்ஜெட் கூட்டத்தொடரோடு இணைந்து குளிர்காலக் கூட்டத்தொடரையும் நடத்த அரசு விருப்பம் கொள்கிறது.

அசாதாரண சூழலில், சிறப்பு ஏற்பாடுகளுடன் அடுத்து நடக்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அனைத்து உறுப்பினர்களும் பங்கேற்று, ஆக்கப்பூர்வமாக கூட்டத் தொடர் நடக்க ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

குளிர்கால கூட்டத்தொடர் நடந்தால் அதில் விவசாயிகள் போராட்டம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டு இருந்த நிலையில் தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து என்ற அறிவிப்பு எதிர்க் கட்சிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *