கர்நாடகாவில் பசுவதை தடுப்பு சட்டத்திற்கு எதிர்ப்பு.. சட்டமேலவையில் பாஜக-காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு இடையே மோதல்

கர்நாடக சட்டமேலவையில் பாஜக மற்றும் காங்கிரஸ் உறுப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சட்டப்பேரவை மேலவை இருக்கையில் இருந்து துணை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதால் சட்டப்பேரவையில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

பெங்களூரு, டிச-15

கர்நாடகாவில் பசுவதை தடுப்புச்சட்டத்திற்கு பாஜக தலைமையிலான அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது. இந்த சட்டம் அம்மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலும் அளிக்கப்பட்டது. இதையடுத்து, பசுவதை தடுப்பு சட்டத்திற்கு அம்மாநில சட்டமேலவையிலும் ஒப்புதல் பெறும் முனைப்பில் ஆளும் பாஜக அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக இன்று சட்டமேலவை சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரிலேயே பசுவதை தடுப்பு சட்டத்தை பாஜக தலைமையிலான அரசு தாக்கல் செய்யலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இன்று அவை நடவடிக்கைகள் தொடங்கிய உடன் அவையில் இருந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் பசுவதை தடுப்பு சட்டத்தை தாக்கல் செய்ய கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், பாஜக உறுப்பினர்களுக்கும், காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் திடீரென காங்கிரஸ் மேலவை உறுப்பினர்கள் அனைவரும் துணை சபாநாயகர் எஸ்.எல். தர்ம கவுடாவை இருக்கையில் இருந்து இழுத்து வெளியேற்ற முயற்சித்தனர். இதனால் பாஜக, காங்கிரஸ், மதசார்பற்ற ஜனதா தளத்தின் மேலவை உறுப்பினர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்த சம்பவங்களால் கர்நாடக சட்ட மேலவையில் பெரும் பரபரப்பு ஏறபட்டது. இரு கட்சி மோதலை தொடர்ந்து சட்டமேலவை காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *