பிகில் சிறப்பு காட்சி : விஜய் ரசிகர்கள் ரகளை

கிருஷ்ணகிரி.அக்டோபர்.25

  கிருஷ்ணகிரியில் விஜய் நடித்த  பிகில் படத்தின் சிறப்பு காட்சி திரையிடுவதில் தாமதமானதால் அவரது ரசிகர்கள்  கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டனர்.

 அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையே இன்று வெளியானது. சிறப்பு காட்சிக்கான   தமிழக அரசின் அனுமதி இரவு 10 மணிக்கு மேல் கிடைத்தது. இதனையடுத்து சென்னை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட திரையரங்குகளில்  அதிகாலை 4 மணியளவில் பிகில் திரைப்படம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கிருஷ்ணகிரியில் ரவுண்டானா அருகே உள்ள திரையரங்கில் பிகில் சிறப்புக்காட்சிக்காக  நேற்று மாலை முதலே  குவிந்த விஜய் ரசிகர்கள் நள்ளிரவை கடந்தும் படம் திரையிடப்படாத காரணத்தால் ஆத்திரம்  அடைந்தனர். இதையடுத்து காவல் தடுப்புகளை உடைத்தும்,கற்களை வீசியும் ரகளையில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமாரக்களையும் உடைத்து அடாவடி செய்தனர்.பின்னர் காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். மேலும் இது தொடர்பாக 34 பேரிடம் விசாரணை நடத்திவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதேபோல்

கள்ளக்குறிச்சி பகுதியில் 3 திரையரங்குகளில் பிகில் படம் திரையிடப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை சிறப்பு காட்சிகள் நடத்தப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் சிறப்பு காட்சிகள் நடத்தக்கோரி போராட்டம் செய்தனர்.

தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்தனர்,விஜய் ரசிகர்கள் மீது தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.

விஜய் ரசிகர்களின் இந்த செயல்பாடு பொதுமக்களை  அதிருப்தி அடைய செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *