முதல்வரை இப்படி விமர்சிக்க கூடாது.. ஸ்டாலினுக்கு குட்டு வைத்த உயர்நீதிமன்றம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி குறித்து மிக கடுமையாக விமர்சிப்பதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை, டிச-14

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் மற்றும் தமிழக அரசை விமர்சித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன. தனக்கெதிரான இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்திருந்தார்.

ஏற்கெனவே ஸ்டாலினுக்கு எதிரான சில வழக்குகள் ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில், மற்ற வழக்குகளின் விசாரணை இன்று மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது மேடைகளில் தமிழக முதல்வர் குறித்து ஸ்டாலின் தெரிவித்த கருத்துக்கள் குறித்து நீதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஸ்டாலின் பேசிய கருத்துகளுக்கு கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதி, லட்சக்கணக்கான தொண்டர்களின் மதிப்பை பெற்றுள்ள எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், முதல்வர் குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை கூறுவது கண்டனத்துக்குரியது என தெரிவித்தார்.

அரசியல் ஆதாயத்திற்காக ஸ்டாலின் உட்பட மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் இது போன்ற தேவையற்ற கடுமையான வார்த்தைகளை பொது வெளியில் பேசுவது ஆரோக்கியமான அரசியலுக்கு அழகல்ல எனவும் அறிவுறுத்தினார்.

முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்தை நாட வேண்டுமே தவிர, கருத்து சுதந்திரம் என்ற பெயரில் இது போன்று கடுமையான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்வது பொதுமக்களிடையே தவறான தாக்கத்தை உருவாக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்பட வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், அவதூறு வழக்குகளை ரத்து செய்து வரும் நீதிமன்ற உத்தரவுகளை, தேவையற்ற கருத்துகள் தெரிவிப்பதற்கான உரிமமாக எடுத்துக்கொள்ள கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்தார். தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியலை உருவாக்கி மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்களுக்கு அறிவுறித்திய நீதிபதி, ஸ்டாலினுக்கு எதிரான மூன்று அவதூறு வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *