சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன்.. கமல்ஹாசன் பேட்டி
வரும் சட்டமன்ற தேர்தலில் கட்டாயம் போட்டியிடுவேன் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேட்டி அளித்துள்ளார்.
சென்னை, டிச-14

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன் இன்று இரண்டாவது நாளாக மதுரையில் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். பிரசாரத்தின் மத்தியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தேர்தல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்து கமல் பேசியதாவது:-
அரசியலில் நேர்மை இல்லை. அதனால்தான் மக்கள் நீதி மய்யம் உருவாகியுள்ளது. அரசியலில் நேர்மை என்பது, வெகு சில கூட்டத்திற்கும் உண்டு. அனைத்து கட்சியிலும் நேர்மையானவர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் கட்சி என்பதே நேர்மையாக வேண்டும். ஆளும் அதிமுக மீது விமர்சனம் இருக்கிறது என்பதை நான் சொல்லத் தேவையில்லை. எங்கள் பிரச்சாரத்திற்குத் தொடர்ந்து தடை விதிப்பதற்கு, மக்கள் ஆதரவு எங்களுக்குக் கிடைத்துவிடுமோ எனப் பயம்தான் காரணம். நானும் ரஜினியும் கூட்டணி அமைக்கத்தான் போகிறோம். அதற்குச் சரியான நேரம் வரவேண்டும். இதை நான் ஒரு வருடத்திற்கு முன்பே கூறினே. பார்ப்போம், 31ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்த்து அதன்பின் பதில் சொல்கிறேன். கட்சி அந்தரங்கத்தை பற்றி இப்போது கூற முடியாது. கூடிய விரைவில் 3ஆம் அணி அறிவிப்பு வெளியாகும்.
பரமக்குடியும் மதுரையும் அருகே என்பதால் இங்கே நான் பிரச்சாரத்தைத் தொடங்குகிறேன் என்றும் வைத்துக் கொள்ளலாம். என் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால் மதுரை வரவேண்டும். இந்த நெருக்கம் எனக்கு மதுரை மீது எப்போதும் உண்டு. தேர்தலில் நான் கண்டிப்பாகப் போட்டியிடுவேன். எங்குப் போட்டியிடுவேன் என இப்போது அறிவிக்கப் போவதில்லை. நாத்திகவாதி நான் இல்லை. நான் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. லஞ்சத்தை ஒழிப்பதே எங்கள் கட்சியின் பிரதான கொள்கை. இதைச் சார்ந்தே எங்கள் அரசியல் நகர்வு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.