விவசாயிகளின் காவல் அரணாக தமிழக அரசு செயல்படுகிறது.. அமைச்சர் S.P.வேலுமணி பெருமிதம்

விவசாயிகளின் காவல் அரணாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகின்றது என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

கோவை, டிச-14

​கோவை மாவட்டம், பூலுவப்பட்டியில் பொதுப்பணித்துறை –நீர்வள ஆதாரத்துறையின் மூலம் நொய்யல் ஆற்று அமைப்பில் விரிவாக்குதல், புணரமைத்தல் மற்றும் நவீனமயமாக்குதல் திட்டத்தின் கீழ் செய்து முடிக்கப்பட்ட பணிகள், நடைபெற்று வரும் பணிகள் தொடர்பான விவசாயிகளுடனான கலந்தாய்வு மற்றும் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி, மாவட்ட வருவாய் அலுவலர் இராமதுரைமுருகன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், கோட்டாட்சியர் தனலிங்கம், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் துவாரகநாத்சிங், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தாமோதரன், உதவி செயற்பொறியாளர் திருமூர்த்தி, உதவி பொறியாளர் சிவக்குமார் உள்ளிட்ட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது ;-

“தமிழக அரசு அதிக வேளாண் விளைச்சலும், வறுமை ஒழிப்பும், ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை உணர்ந்து வேளாண் நலன்காக்கும் அரசாக திகழந்து வருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகளின் தேவைகள் என்ன என்பதை முற்றிலும் உணர்ந்தவர் என்பதோடு, விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்க நீர் வளத்தைப் பெருக்க வேண்டும் என்பதற்காகவே பல திட்டங்களையும் வகுத்து வருகிறார்.

2020-21ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, வேளாண்துறைக்கு ரூ.11 ஆயிரத்து 894 கோடியே 48 இலட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, வேளாண்மைத் துறைக்கு அதிக நிதியொதுக்கீடு செய்யும் மாநிலம் தமிழ்நாடு ஆகும். தமிழ்நாடு அரசு விவசாயத்துறையில் சிறந்த செயல்பாட்டிற்கு உலக வேளாண் விருது, ‘ஸ்காச் விருது” உள்ளிட்டவை பெற்றுள்ளது.

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வண்ணம் முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத்திட்டம் என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. முதலமைச்சர் ஒரு விவசாயியாக இருப்பதனால் விவசாயிகள் நலன் காக்கும் திட்டங்களை அறிந்து தானே முன் வந்து பல வேளாண்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

அதன்படி, கோயம்புத்தூர் மாவட்டத்தில் விவசாயிகள் தங்களின் உழவுத்தொழிலை முனைப்புடன் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில் பல்வேறு திட்டப்பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பகுதி விவசாயிகளின் விவசாயத்திற்கான நீர்தேவையினை நொய்யல் நதி வழங்கி வருகின்றது. செழிப்புடன் பாய்ந்து வந்த நொய்யல் நதியானது காலப்போக்கில் குன்றி இருந்தது.

ஒரு நதி என்பது ஒரு இனத்தின் அடையாளம் என்பதை கருத்தில் கொண்டு, காவேரி வடிநிலத்தின் ஒரு கிளை நதியாக விளங்கும் நொய்யல் நதியினை மீட்டெடுக்கும் முயற்சியாக, தமிழ்நாடு முதலமைச்சர் நொய்யல் ஆற்றினை சீரமைக்க ரூ.230 கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்கள். பணிகள் நடைபெற்று வருகின்றது. இதில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மட்டும் நொய்யல் ஆற்றின் 72கி.மீ நீளபகுதிகளை சீரமைக்க ரூ.174கோடி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.

இதில் நேரடியாக பயன்பெறும் விவசாயிகளின் கருத்துக்கள் கேட்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு, சிங்காநல்லூர், சூலூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 1இலட்சம் ஏக்கர் பாசன நிலங்கள் புத்துயிர் பெறும். நொய்யல் ஆற்றின் கிளை நதிகளாக உள்ள இருட்டுப்பள்ளம், உரிப்பள்ளம், கள்ளிப்பள்ளம், தென்னமநல்லூர் பள்ளம் மற்றும் தென்கரைப்பள்ளம் ஆகிய இடங்களில் நிலத்தடி நீர் செறிவூட்டும் தடுப்பணைகளும், நீலி அணைக்கட்டு, சித்தரைச்சாவடி அணைக்கட்டு கோயம்புத்தூர் அணைக்கட்டு, குறிச்சி அணைக்கட்டு ஆகிய பகுதிகளில் தடுப்பணைகள் புணரமைப்பு மற்றும் புதியதாக தடுப்பணைகள் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகின்றது.

நொய்யல் ஆற்றில் உள்ள 23 அணைக்கட்டுகளில் பழுதடைந்த 18 அணைக்கட்டுகள் சீரமைக்கப்படுகின்றது. மீதமுள்ள 5 அணைக்கட்டுகள் குடிமராமத்து, நபார்டு மற்றம் தன்னிறைவு போன்ற திட்டங்களில் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ளது. அதுபோலவே தமிழ்நாடு அரசு குடிமராமத்துத் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மூலம் சாதனை படைத்துள்ளது.

விவசாயிகளின் காவலனாக விளங்கிய நாரயணசாமி நாயுடு, அன்னூர் வையம்பாளையம் பகுதியில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது, அதுபோலவே வி.கே.பழனிசாமி கவுண்டர் ஆழியாரில் மணிமண்டபம் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. ஒரு விவசாயி முதலமைச்சாரக இருப்பதால் தமிழகத்தின் அனைத்து திட்டங்களும் விவசாயிகளின் நலன்சார்ந்து செயல்படுத்தப்படுத்தி வருகின்றார்.”

இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *