அதிரடி காட்டும் எடப்பாடியார்.. தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார்..!

தமிழகத்தில் அம்மா மினி கிளினிக் திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி தொடங்கி வைத்தார். சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல்வர் அறிவித்த 2,000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடங்கப்படுகின்றன. சென்னையில் முதல் கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன.

சென்னை, டிச-14

தமிழ்நாட்டில் கொரோனா பரிசோதனையை விரைவாக மேற்கொள்ள 2 ஆயிரம் மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் இன்று காலை சென்னை ராயபுரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மினி கிளினிக்கை தொடங்கி வைத்தார். சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் முதல் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி அவர் தொடங்கி வைத்தார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜய பாஸ்கர், ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். கிளினிக் காலை 8-12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை என 8 மணிநேரம் செயல்படும். கிளிக்கில் ரத்த அழுத்தம், சர்க்கரைநோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யலாம். சென்னையில் முதல்கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. கிராம்ப்புறம் 1400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன.

தற்போது தமிழ்நாட்டில் 1,851 ஆரம்ப சுகாதார நிலையங்கள் இருக்கிறது. 8 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு ஆஸ்பத்திரியும் உள்ளது. இந்த மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்ட பிறகு, 3 கி.மீ.க்கு ஒரு ஆஸ்பத்திரி இருக்கும். இங்கு, காய்ச்சல், தலைவலி போன்ற எளிதான நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதுடன், கொரோனா தொற்று இருக்கிறதா? என்பதையும் கண்டறிந்து மேல் சிகிச்சைக்கு, பெரிய ஆஸ்பத்திரிகளுக்கு நோயாளிகள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.

மினி கிளினிக்குகளில் ரத்தம் அழுத்தம், சர்க்கரை பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, மகப்பேறு பரிசோதனை வசதிகள் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதனுடன் இ.சி.ஜி. கருவி, பல்ஸ் ஆக்சிமீட்டர், வெப்பநிலை கண்டறியும் தெர்மல் ஸ்கேனர் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ வசதிகள் கட்டாயமாக இருக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

தொடர்ந்து, வரும் 16-ந்தேதி (நாளை மறுநாள்) சேலம் மாவட்டம் எடப்பாடியில், அந்த மாவட்டத்துக்குரிய 40 மினி கிளினிக்குகளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறார். தொடர்ந்து எல்லா மாவட்டங்களிலும், அந்தந்த மாவட்ட அமைச்சர்கள் தொடங்கி வைக்கிறார்கள். இந்த மாத இறுதிக்குள் 2 ஆயிரம் மினி கிளினிக்குகளையும் தமிழகம் முழுவதும் திறக்க திட்டமிடப்பட்டு, பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *