ஆவின் பால் விலை உயர்வுக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்னை, செப்டம்பர்-6

தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பசும் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும், எருமை பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 6 ரூபாயும் உயர்த்தி, தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு அறிவித்தது.

ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலை லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதற்கான அறிவிப்பாணையை கடந்த ஆகஸ்ட் மாதம் தமிழக அரசின் ஆவின் நிறுவனம் வெளியிட்டது. ஆவின் நிறுவனத்தின் இந்த விலை உயர்வை எதிர்த்து, திருவண்ணாமலையைச் சேர்ந்த முனிகிருஷ்ணன் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், தனியார் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலின் விலை அதிகமாக இருப்பதால், பெரும்பாலான நடுத்தர மக்கள் ஆவின் பாலை மட்டுமே நம்பியுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.. ஆகையால், ஆவின் பாலின் சில்லறை விற்பனை விலையை உயர்த்திய அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டிருந்தது..

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் சேசாயி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது விவசாயிகளின் பிரச்சனைகளுக்கு எதிராக ஒரு புறம் போராட்டம் நடத்தும் நிலையில், விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழக அரசு பால் விலையை உயர்த்தினால் அதனை எதிர்த்து வழக்கு தொடர்வதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தொடர்ந்து போதிய ஆதாரங்கள் எதுவுமின்றி இந்த வழக்கு தாக்கல் செய்யபட்டுள்ளதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர். இதையடுத்து வழக்கை திரும்ப பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனை ஏற்று வழக்கை திரும்பப்பெற அனுமதி அளித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *