கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக ஆ.ராசா மீது வழக்குப்பதிவு..!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் முதலமைச்சர் பழனிசாமி ஆகியோரை அவதூறாக விமர்சித்த‌தாக, திமுக எம்பி ஆ.ராசா மீது 2 பிரிவுகளில் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, டிச-12

சமீபத்தில் நடந்த கூட்டம் ஒன்றில் பேசிய முதல்வர் பழனிசாமி 2ஜி வழக்கில் திமுகவின் சம்பந்தம் குறித்தும், சர்க்காரியா கமிஷன் விசாரணை குறித்தும் சுட்டிக் காட்டியிருந்தார்.

இதற்கு பதிலளித்த ஆ.ராசா, “மறைந்த உங்கள் தலைவி மீது தான் வழக்கு தொடரப்பட்டு சிறைக்கும் சென்றார், உங்கள் கட்சியில் தான் தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர்கள் உள்ளனர், உச்ச நீதிமன்றம் உங்கள் தலைவியை பற்றி குறிப்பிட்டுள்ளது, ஆனால் 2 ஜி வழக்கில் நானே வாதாடி குற்றமற்றவன் என வெளியில் வந்தேன், வேண்டுமானால் தலைமைச் செயலகம் வருகிறேன், முதல்வர் என்னுடன் வழக்குகள் பற்றி விவாதிக்க தயாரா?” என்று சவால்விட்டார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் பழனிசாமி, “ஆ.ராசா எல்லாம் பெரிய ஆள் இல்லை? அவருடன் நாங்கள் ஏன் விவாதிக்க வேண்டும்” என்று காட்டமாகப் பதிலளித்தார்.

இந்நிலையில் அதிமுக வழக்கறிஞர் பிரிவு சார்பில் செல்வக்குமார் என்பவர் அளித்த புகாரின்பேரில் ஆ.ராசா மீது 153 (வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுவது), 505 (1)(பி)(அரசுக்கு எதிராக பொது அமைதியைக் கெடுக்கும் வகையில் தூண்ட்டக்கூடிய பேச்சு, செயல்) ஆகிய இரு பிரிவுகளின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *