மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி… புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நம்பிக்கை
சென்னை,டிச-12

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை இன்று காலை புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமியும், புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியனும் சந்தித்து பேசினர். சந்திப்பின் போது திமுக பொது செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாராதி உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

பின்னர் நாராயணசாமி அளித்த பேட்டி பின்வருமாறு:-
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தோம். கடந்த நான்கரை ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மக்கள் நலத்திட்டங்களை காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியில் சிறப்பாக நிறைவேற்றி வருகிறோம். வர உள்ள சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை எங்களுடைய தலைமையும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இணைந்து எந்த முடிவு எடுத்தாலும் நாங்கள் கட்டுப்படுவோம். குறிப்பாக தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணிக்கான வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராவது உறுதி. அதற்கு காரணம் அவரது கடின உழைப்பு. அவர் தமிழக மக்களுக்கு ஆற்றிய பணி.
இவ்வாறு அவர் கூறினார்.