வேளாண் சட்டங்களால் விவசாயிகள் அதிக லாபம் ஈட்டலாம்.. பிரதமர் மோடி பேச்சு
விவசாயிகள் அதிக லாபம் ஈட்டவே புதிய வேளாண் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லி, டிச-12

இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் (எப்ஐசிசிஐ) மாநாட்டு துவக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
விவசாயத்தை ஊக்குவிப்பதற்காகவே புதிய வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் கூடுதல் சந்தை வசதிளை பெற வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வேளாண் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு புதிய சந்தைகளையும் வாய்ப்புகளையும் கொண்டு வரும். அவை தொழில்நுட்பத்திலிருந்து கிடைக்கும். இது விவசாயத்தில் அதிக முதலீட்டைக் கொண்டுவரும். இது விவசாயிகளுக்கு, குறிப்பாக சிறு விவசாயிக்கு மிகவும் பயனளிக்கும்.
விவசாயிகள் இப்போது தங்கள் விளைபொருட்களை மண்டிகளிலும், வெளியேயும் விற்கலாம். விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை டிஜிட்டல் தளங்கள் வாயிலாகவும் விற்கலாம். விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் அவர்களை வளமானவர்களாக மாற்றுவதற்கும் இந்த முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் எடுத்து வருகிறோம். சீர்திருத்தங்களால் வேளாண் துறையில் உள்ள அனைத்து தடைகளும் இப்போது நீக்கப்பட்டுள்ளன.
இக்கட்டான சூழலில் தேசம் கற்ற பாடம், வலிமையான எதிர்காலத்துக்கான உறுதியாக அமைந்தது.விவசாயம் மற்றும் அது சார்ந்த துறைகளில் இருந்த தடைகள் நீக்கப்பட்டு, புதிய சீர்திருத்தங்கள் மூலம் புதிய சந்தைவாய்ப்பு, தொழில்நுட்பம் சார்ந்த பலன்கள் கிடைக்க உள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.