ரஜினிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் பிறந்தநாள் வாழ்த்து..!
இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். ரஜினிகாந்திற்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை, டிச-12

சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகர் ரஜினி இன்று தனது 70வது பிறந்தநாளைக் கொண்டாடி வருகிறார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும், நடிகர், நடிகைகளும், அவரது ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தனது ட்விட்ட பக்கத்தில் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். அதில், “திரு. ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ எனது உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து #Superstar ஆக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் @rajinikanth மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அனைவரிடமும் நட்புடனும், அன்புடனும் பழகும் சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் என குறிப்பிட்டுள்ளார்.