பாமகவினரை உற்சாகப்படுத்திய ராமதாசின் அறிவிப்பு..

பாமகவில் சிறந்த செயல் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

சென்னை, டிச-12

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு ;-

பாட்டாளி மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக சிறப்பாக களப்பணியாற்றுபவர்களை ஊக்குவிக்கும் வகையிலும், அவர்களைப் போன்று தீவிரமாக களப்பணியாற்ற மற்றவர்களைத் தூண்டும் வகையிலும் ’’பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல்வீரர்கள் விருது’’ வழங்க முடிவு செய்யப்பட்டிருக்கிறது. 2020-ஆம் ஆண்டில் தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் மொத்தம் 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படவுள்ளன.

பாட்டாளி மக்கள் கட்சி சமூக முன்னேற்ற சங்க சிறந்த செயல்வீரர் விருது, பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல் வீரர் விருது, பாட்டாளி மக்கள் கட்சி சிறந்த செயல் வீராங்கனை விருது, பாட்டாளி மக்கள் கட்சி சகோதர சமுதாய சிறந்த செயல்வீரர் விருது, பாட்டாளி மக்கள் கட்சி இளைஞரணி சிறந்த செயல்வீரர் விருது என மொத்தம் 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்படும். இந்த விருதுகள் பாராட்டுப் பத்திரம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் கொண்டதாக இருக்கும். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் இணை அமைப்பு நிர்வாகிகளின் களப்பணி, தலைமையால் வழங்கப்படும் பணிகளை சிறப்பாக செய்தல், கட்சியின் வளர்ச்சிக்காக பாடுபடுதல் உள்ளிட்ட பணிகளை அளவீடு செய்து அவற்றின் அடிப்படையில் இந்த விருதுகள் வழங்கப்படும்.

2020-ஆம் ஆண்டுக்கான பா.ம.க. சிறந்த செயல்வீரர் விருதுகளைப் பெற்றவர்களின் விபரங்கள் திசம்பர்25-ஆம் தேதி அறிவிக்கப்படும். இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ‘‘2020-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம்… 2021-ஆம் ஆண்டை வரவேற்போம்’’ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இந்த விருதுகள் வழங்கப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *