யாரோ எழுதிக் கொடுப்பதை படிக்கும் கனிமொழிக்கு கோவையை பற்றி என்ன தெரியும்?.. அமைச்சர் S.P.வேலுமணி பதிலடி

மக்களை ஏமாற்றும் பொய் பிரச்சார போட்டியில் பங்குபெற கோவை வந்திருக்கும் கனிமொழி இதற்கு முன் கோவைக்கு வந்திருக்கிறாரா?பொய் சொல்லி மக்களை ஏமாற்றுவது யாரென குடும்பத்திற்குள் நடக்கும் போட்டியில் யாரோ எழுதிக் கொடுப்பதை படிக்கும் திமுக எம்.பி.கனிமொழிக்கு கோவையை பற்றி என்ன தெரியும்? என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

கோவை, டிச-11

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி, மாநகராட்சி ஆணையர் குமாரவேல் பாண்டியன், காவல்துறை அதிகாரிகள் உட்பட அரசு அதிகார்கள் கலந்து கொண்டனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கோவையில் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை கொடுத்துள்ளோம். அதிக பாலங்கள், சாலைகள், 5 கல்லூரிகள், அத்திக்கடவு அவினாசி திட்டம் என யாரும் செய்யாத திட்டங்களை தந்துள்ளார் தமிழக முதலமைச்சர். கோவையில் திட்டங்கள் குறித்தும், கொரோனா முழுமையாக தொற்றை குறைக்கவும் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், பொதுமக்கள் சிரமப்படாமல் மேம்பால பணிகளை மேற்கொள்வது குறித்த ஆலோசனை செய்யப்பட்டது.

கோவையில் டைடில் பார்கில் 2.42 ஏக்கரில் ரூ. 114.16 கோடியில் புதிய தகவல் தொழில் நுட்ப கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளார் முதலமைச்சர். இந்தியாவில் தகவல் தொழில்நுட்பத்திற்கு சிறந்து விளங்கும் சென்னை, பெங்களூர் வரிசையில் கோவையும் தகவல் தொழி நுட்ப வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த புதிய கட்டிடம் மூலமாக, சுமார் 20 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் 40 ஆயிரம் பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு உள்ளது.மென் பொருள் நிறுவங்களுக்கு இடம் வாடகை அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதனை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கனிமொழி தூத்துக்குடி எம்.பி.,யாக உள்ளார் கோவையை குறித்து அவருக்கு தெரியாது. ஐ பேக் போன்ற நிறுவனங்கள் யாராவது எழுதிக்கொடுத்தால் கோவை வளர்ச்சியடையவில்லை என்கின்றார். தேர்தல் நேரத்தில் மட்டும் ஏதாவது சொல்கின்றனர். திமுக.,வினர் செய்த திட்டங்கள் என்று எதுவும் இல்லை.

பெரிய சிகிச்சைகளுக்கு கோவை மக்கள் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த சூழலில், அரசு மருத்துவமனை மேம்படுத்தப்பட்டு பல கோடி மதிப்பிலான இயந்திரங்கள் வாங்கி கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுக.,வினர் ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டுகளை மட்டும் செய்கின்றனர். டெல்லி, பெங்களூர், சென்னை, மும்பையில் இருப்பதை போல கோவையிலும் மெட்ரோ ரயில் திட்டம் கொண்டுவர அடித்தளம் அமைத்துள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் குளங்கள் மேம்படுத்தியுள்ளோம்.

கொரோனா காலத்தில் உணவு, மருந்து மற்றும் சமையல் பொருட்களை ஒவ்வொரு வீட்டிற்கும் கொடுத்தோம். திமுக.,வினர் எப்படி கொடுத்தார்கள் என்று தெரியுமா? ஒரே பொருளை ஒருவருடம் கொடுத்துவிட்டு, அதே பொருளை வாங்கி மற்றொருவருக்கு கொடுத்த கதையெல்லாம் தெரியும்.

ராணுவ தளவாடங்கள் அமைக்கும் தொழிற் பூங்கா அமைக்க மத்திய அமைச்சருடன் பேசப்பட்டுள்ளது. இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்தியாவிலேயே அனைவருக்கும் வீடுகட்டும் திட்டத்தில் இந்தியாவிலேயே கோவையில் தான் முதன்மையில் உள்ளது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டையாக உள்ளது. இப்போது டெல்டா மாவட்டங்களிலும் வந்துவிட்டது. சென்னை உட்பட தமிழ்கம் முழுவதும் தற்போது ஆதரவு கிடைத்துள்ளது. ஸ்டாலினை போல ஒரு அறையில் இருந்து கொண்டு பேசுபவர் அல்ல தமிழக முதலமைச்சர் எடப்பாடி. மக்களுக்காக நேரடியாக சென்று பணியாற்றுபவர்.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *