கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அறங்காவலர் சுப்பிரமணியம் மறைவு.. முதல்வர் உள்ளிட்டோர் இரங்கல்

கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அமைப்பின் அறங்காவலர் சுப்பிரமணியம் (78) உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, டிச-11

இது தொடர்பாக தமிழக முதல்வர் வெளியிட்டிருக்கும் இரங்கல் செய்தியில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் குறைந்த விலையில் மதிய சாப்பாடு வழங்கி வந்த சாந்தி கியர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரும், சாந்தி சமூக சேவை அறக்கட்டளையின் நிறுவனருமான சுப்பிரமணியன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று உடல் நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன்.

சுப்பிரமணியன் கோவை பகுதியிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் உணவு, மருத்துவம், உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்த பெருமைக்குரியவர்.

சுப்பிரமணியன் தனது இறுதி மூச்சு வரை சமூக சேவையில் தன்னை அர்பணித்துக் கொண்டவர் என்ற சிறப்புக்குரியவர். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அவருடைய தன்னலமற்ற சேவையை பல ஆண்டுகளாகப் பெற்று வந்த கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன் என்று முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில் ஏழை எளிய மக்களின் நலனுக்காக மலிவுவிலை உணவகம், மருத்துவமனை, மருந்தகம் ஆகியவற்றை நடத்தி வந்த கோவை சாந்தி சோசியல் சர்வீஸ் அறங்காவலர் திரு.சுப்பிரமணியம் அவர்களின் மறைவு மிகவும் வருத்தமளிக்கிறது, அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

திமுக தலைவரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள இரங்கல் செய்தியில், “உழைப்பால் உயர்வு பெற்று, மனிதநேயத்துடன் பிறர் துயர் துடைத்த நல் இதயமும் கொண்ட மாமனிதர் கோவை சாந்தி கியர்ஸ் அறக்கட்டளை நிறுவனர் சுப்பிரமணியத்தின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். வலது கை கொடுப்பதை இடது கை அறியாது என்பதற்கேற்ப எவ்வித விளம்பரமும் தேடாமல் மிகக் குறைந்த விலையில் உணவளித்து, பசிப் பிணி போக்கியவர். பலருக்கும் உதவிகள் செய்து வாழ்வில் ஒளியேற்றிய சுப்பிரமணியன் உலகை விட்டு மறைந்தாலும் நம் உள்ளத்தில் நிலைத்திருப்பார்”.இவ்வாறு மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *