கோவையில் ரூ.114 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்துக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்
முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைமைச் செயலகத்தில், தகவல் தொழில்நுட்பவியல் துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கு காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மேலும், திருச்சி மாவட்டம், நாவல்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டினார்.
சென்னை, டிச-11

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
“தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழில்கள் தமிழகத்தில் தழைத்து வளர்ந்திட தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தால், சென்னை மற்றும் இரண்டாம் நிலை நகரங்களான கோயம்புத்தூர், மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, ஓசூர் ஆகிய இடங்களில் 8 தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் (எல்கோசெஸ்கள்) நிறுவப்பட்டுள்ளன.
முதல்வர் 1.6.2018 அன்று சட்டப்பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், தொழில் முனைவோர்களுக்குத் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் அதனைச் சார்ந்த வணிகத்தைத் தொடங்க ஏதுவாக, கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சியில் உள்ள எல்கோசெஸ்ஸில் 2 லட்சத்து 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலும், திருச்சியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவிலும் இரண்டு தகவல் தொழில்நுட்பக் கட்டிடங்கள் கட்டப்படும் என்று அறிவித்தார்.
அதன்படி, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில் கோயம்புத்தூர் மாவட்டம், விளாங்குறிச்சி சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில், 2.66 லட்சம் சதுர அடி பரப்பளவில் 114 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கு முதல்வர் இன்று காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார்.
புதிதாகக் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும். இப்பூங்கா முழுமையாகச் செயல்படும்போது, சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 40 ஆயிரம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால் தகவல் தொழில்நுட்பத் துறையில் கோயம்புத்தூர் முக்கிய மையமாக அமையும்.
மேலும், தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் சார்பில், திருச்சி மாவட்டம், நாவல்பட்டு சிறப்புப் பொருளாதார மண்டல வளாகத்தில் 1.16 லட்சம் சதுர அடி பரப்பளவில் 48 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்திற்கு தமிழ்நாடு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டினார்.
புதிதாகக் கட்டப்படவுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தில், மென்பொருள் நிறுவனங்களுக்கு வாடகை அடிப்படையில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளுடன் இடம் வழங்கப்படும். இப்பூங்கா முழுமையாகச் செயல்படும்போது, சுமார் 10 ஆயிரம் நபர்களுக்கு நேரடியாகவும், சுமார் 20 ஆயிரம் நபர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்”.
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.