‘சீரமைப்போம் தமிழகத்தை’ – டிச.13ம் தேதி பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
சட்டப்பேரவை தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை நாளை மறுநாள் (டிச.13) மதுரையில் தொடங்க உள்ளார்.
சென்னை, டிச-11

தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடக்க உள்ளது. இத்தேர்தலை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. மக்கள்நீதி மய்யம் கட்சியின் சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பது, வேட்பாளர்களைக் கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், தனது முதல்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை கடந்தமாதம் மதுரையில் தொடங்க கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார். ஆனால், கொரோனா வைரஸ் பரவல்காரணமாக அனுமதி கிடைக்காததால் தேர்தல் பிரச்சாரத்தை தள்ளிவைத்தார்.
இதற்கிடையே, அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்த தமிழக அரசு அண்மையில் அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து வருகிற 13-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை 4 நாட்கள் முதல்கட்ட பிரச்சாரத்தில் கமல் ஈடுபட உள்ளார்.
இதுதொடர்பாக, மக்கள் நீதிமய்யம் கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘சீரமைப்போம் தமிழகத்தை’ என்ற பெயரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட தேர்தல்பிரச்சாரத்தை வரும் 13-ம் தேதி மதுரையில் தொடங்கி தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் 16-ம் தேதி வரை பிரச்சாரம் செய்ய உள்ளார். கட்சியின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் பெரும்எழுச்சியுடன் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
