மத்திய படைகளை மீறி ஜே.பி.நட்டா மீது தாக்குதல் நடத்த முடியுமா?.. போதும் உங்க நாடகம் என மம்தா சீற்றம்
மேற்கு வங்கத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது திட்டமிட்ட நாடகம் என அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா, டிச-11

மேற்கு வங்க மாநிலம் சென்ற பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, டைமண்ட் ஹார்பர் தொகுதியில் நடந்த பொது கூட்டத்திற்கு சென்று கொண்டு இருந்தார். அப்போது ஒரே மணி நேரத்தில் 3 பகுதிகளில் அடுத்தடுத்து அவரது பாதுகாப்பு வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சவுத் 24 பர்கானாஸ் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நட்டா கார் மீது தாக்குதல் நடத்தியதாக பாஜகவினர் குற்றம் சாட்டினர்.
பொதுமக்களின் கவனத்தை பெறும் வகையில், பாஜகவால் அரங்கேற்றப்பட்ட நாடகமே இந்த தாக்குதல் சம்பவம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சாடியுள்ளார். மத்திய பாதுகாப்பு படையினர் இருக்கும் போது, இது போன்ற சம்பவங்கள் எவ்வாறு நடக்கும் என அவர் கேட்டுள்ளார். பாஜகவினருக்கு வேலை வெட்டி இல்லை என்று விமசிர்த்த மம்தா, திடீரென உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்கு வங்கம் வருகிறார். பின்னர் நட்டா, சட்டா என யார் யாரோ வருகிறார்கள் என்றார். கூட்டமே சேராவிட்டாலும் பாஜகவினரை வைத்து வித்தை காட்டுவதாகவும் மம்தா சாடினார். இதனிடையே குண்டு துளைக்காத காரில் சென்றதால் தனக்கு காயம் ஏற்படவில்லை என ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தின் மம்தா பேனர்ஜியின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனிடையே, ஜே.பி.நட்டாவின் வாகனம் தாக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் மேற்கு வங்கத்தின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து ஆளுநரிடமும் தலைமை செயலாளரிடமும் அமித்ஷா அறிக்கை கேட்டுள்ளார்.