30 வருஷமா இதைத்தான் சொல்றாரு.. ரஜினி கட்சிலாம் தொடங்க மாட்டார்.. எல்.கே.சுதீஷ் பேச்சு

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கப்போவது இல்லை என்று தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். கடந்த 30 ஆண்டுகளாக ரஜினிகாந்த் இதையே சொல்லி வருகிறார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தருமபுரி, டிச-10

தருமபுரி மாவட்ட தேமுதிக தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எல்.கே.சுதீஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

“தமிழகத்தில் தேமுதிக தேர்தல் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டத்தை தருமபுரியில் தொடங்கியுள்ளோம். எதிர்வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி தொடர்பாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர்களின் கருத்தைக் கேட்டறிந்துதான் முடிவு செய்வோம். வருகிற ஜனவரி மாதம் கட்சியின் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டத்தில் ஆலோசனை செய்யப்பட்டு, கட்சியின் நிலைப்பாடு குறித்து தலைவர் விஜயகாந்த் அறிவிப்பார். சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்திற்கு விஜயகாந்த் கண்டிப்பாக வருவார். என்னைப் பொறுத்தவரை ரஜினிகாந்த் கண்டிப்பாக அரசியல் கட்சி தொடங்க மாட்டார். தொடங்கப்போவதும் இல்லை.

வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடும் விவசாயிகளுக்கு தேமுதிக ஆதரவு தெரிவித்துள்ளது. விவசாயிகளுக்கு தேமுதிக எப்போதும் ஆதரவாக இருக்கும். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் எனத் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஏற்கெனவே தமிழக ஆளுநருக்கு அழுத்தம் தந்துள்ளார். இக்கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்துவோம்”.

இவ்வாறு எல்.கே.சுதீஷ் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *