மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

சென்னை, டிச-10

தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தபோது அவரை பற்றியும், தமிழக அரசு குறித்தும், அமைச்சர்கள், அவர்களின் துறைகள் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்துகள் குறித்து தமிழகத்தில் பல்வேறு நீதிமன்றங்களில் அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த அவதூறு வழக்குகளை ரத்து செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டாலின் தனித்தனியே வழக்குகள் தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு வழக்குகளின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்நிலையில், அந்த வழக்குகளில் 12 வழக்குகள் நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.குமரேசன், அரசு மற்றும் முதல்வருக்கு எதிரான கருத்துகள் அனைத்தும் விமர்சனம் தானே தவிர அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்கக்கூடியவை அல்ல என வாதிட்டார். மேலும் இந்த 12 வழக்குகளில் 3 வழக்களுக்கான அரசாணைகளை உயர் நீதிமன்றம் ஏற்கெனவே ரத்து செய்துள்ளாக குறிப்பிட்டார்.

அரசு தரப்பில் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, அந்த 3 அரசாணைகள் ரத்து செய்யப்பட்டதே தவறு என்பதால், அந்த தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், தனிப்பட்ட முறையிலும் ஸ்டாலின் பேசியதாலேயே அவதூறு வழக்குகள் தொடரப்பட்டதாக வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதீஷ்குமார், ஜெயலலிதா சார்பில் தொடரப்பட்ட மூன்று அவதூறு வழக்குகளையும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடர்ந்த ஒரு அவதூறு வழக்கையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

பொது வாழ்க்கையில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என்றும், அதேசமயம் விமர்சனங்களை முன்வைப்பதற்கு முன்பாக தங்கள் பொறுப்பை உணர்ந்து கருத்துகளை தெரிவிக்க வேண்டுமென்றும் நீதிபதி அறிவுறுத்தினார்.

எந்த அரசியல் கட்சியை சேர்ந்த தலைவர்களாக இருந்தாலும் தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தினார். அதேபோல தங்கள் ஆளுமையை தங்கள் செயல்பாடுகளில் வெளிப்படுத்தி முன்னுதாரணமாக இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தி உள்ளார்.

மேலும், வலுவான குற்றச்சாட்டோ அல்லது உரிய ஆதாரமோ இல்லாமல் அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யும் கலாச்சாரம் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் நிறுத்தப்பட வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

கடந்த முறை பெருவெள்ளத்தில் ஏற்பட்ட அனுபவத்தை பாடமாக எடுத்துக்கொண்டதால் தான், இந்த ஆண்டு பெய்துள்ள கூடுதல் மழையால் அனைத்து நீர் நிலைகளும் நிரம்பிய நிலையில் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாமல் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக பாராட்டு தெரிவித்தார்.

அதே போல விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அனுபவமாக எடுத்துக்கொள்ளும்படியும் அறிவுறுத்தினார். இந்த ஆண்டு மழையின்போது நீர்நிலைகள் முழுமையாக நிறைந்தபோதும் ஏரிகள் திறப்பில் தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமரேசனும் நீதிமன்றத்தில் பாராட்டு தெரிவித்தார்.

இதையடுத்து, ஸ்டாலின் தொடர்ந்த மற்ற வழக்குகளின் விசாரணையை டிசம்பர் 14-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *