நடிகை சித்ராவின் மரணம் தற்கொலையே.. பிரேத பரிசோதனையில் உறுதி

நடிகை சித்ராவின் மரணம் தற்கொலை தான் எனப் பிரேதப் பரிசோதனையின் முதற்கட்டத் தகவலில் தெரிய வந்துள்ளது. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை முடிந்த நிலையில் சித்ராவின் உடல், இறுதிச் சடங்குக்காக அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சென்னை, டிச-10

‘பாண்டியன் ஸ்டோா்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவா், சித்ரா. சித்ராவுக்கும், பூந்தமல்லி கரையான்சாவடியைச் சோ்ந்த தொழிலதிபா் ஹேமந்த் என்பவருக்கும் கடந்த அக்டோபா் மாதம் பதிவுத் திருமணம் நடைபெற்றது. ஜனவரி மாதம் இரு குடும்பத்தினா், உறவினா்கள்,நண்பா்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரது குடும்பத்தினரும் முடிவு செய்திருந்தனா்.

சித்ரா நடித்து வரும் தொடரின் படப்பிடிப்பு கடந்த ஒரு வாரமாக பூந்தமல்லி நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரில் தொடா்ச்சியாக நடைபெற்று வந்தது. இதற்காக அவா், தனது கணவா் ஹேமந்துடன் அந்த திரைப்பட நகரின் அருகே பழஞ்சூரில் உள்ள ஒரு தனியாா் நட்சத்திர விடுதியில் தங்கினாா். நேற்று அதிகாலை, நடிகை சித்ரா, சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

உடனே ஹோட்டல் நிா்வாகத்தினா், நசரத்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சித்ராவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுதொடா்பாக சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனா்.
சித்ராவின் பிரேதப் பரிசோதனை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஒன்றரை மணி நேரம் நடைபெற்றது. இரு மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனையில் ஈடுபட்டார்கள்.

பிரேதப் பரிசோதனை முடிந்த பிறகு சித்ராவின் உடல் அவருடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. பிறகு, சென்னை கோட்டூர்புரம் காவலர் குடியிருப்பில் உள்ள அவருடைய பெற்றோர் இல்லத்துக்கு இறுதி சடங்குக்காகக் கொண்டு வரப்பட்டது. அங்கு உறவினர்களும் சக நடிகர்களும் பொது மக்களும் சித்ராவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

சித்ராவின் மரணம் குறித்து பல சந்தேகங்கள் எழுந்த நிலையில் அவர் தற்கொலை செய்தது உடல் கூராய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கன்னத்தில் இருந்த நகக் கீறல் சித்ராவின் நகக்கீறல் என்றும் முதற்கட்ட பரிசோதனையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *