திட்டமிட்டபடி திரைக்கு வரும் ”பிகில்”

சென்னை, அக்டோபர்-24

விஜய் நடித்துள்ள ’பிகில்’ திரைப்படம் சட்டச் சிக்கல்களுக்கு மத்தியிலும் திட்டமிட்டபடி நாளை வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படம் 25-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. படம் தொடங்கியதில் இருந்தே கதை, அரசியல் தலையீடுகள், வழக்கு என பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறது பிகில்.

பிகில் டிரெய்லரில் இறைச்சி வெட்டும் கட்டையில் விஜய் கால் வைத்து இழிவு படுத்திவிட்டார் என ஒரு அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தினார்கள். மேலும், பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கதை கூறியதற்கு எதிராக பூ வியாபாரிகள் சங்கம் போர்க்கொடி தூக்கியது.

இதைத்தவிர, பிகில் படத்தில் விஜய் காவி வேட்டி அணிந்து, நெற்றியில் பொட்டு வைத்துக்கொண்டு கழுத்தில் சிலுவை அணிந்துள்ளார், அவர் வழக்கமாக ருத்ராட்சம் தான் அணியவேண்டும் என இந்து அமைப்புகளும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இதற்கிடையில், பிகில் படத்தின் கதைக்கு உரிமை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 வழக்குகள் போடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஆவணங்கள் முறையாக சமர்ப்பிக்கவில்லை எனக்கூறி விசாரணையை ஒத்திவைத்ததால் பிகில் படம் நாளை வெளியாவதில் இருந்த சிக்கல் நீங்கியுள்ளது.

முன்னதாக, உதவி இயக்குநர் கே.பி.செல்வா தொடர்ந்த வழக்கிலும் பிகில் வெளியீடு தொடர்பாக நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதனால் பிகில் படம் திரைக்கு வருவதில் இருந்த சிக்கல் நீங்கியிருக்கிறது. படம் நாளை திரைக்கு வருவதால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *