ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம்.. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்..!
டெல்லியில் ரூ.971 கோடியில் பிரமாண்டமாக அமைய உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
டெல்லி, டிச-10

டெல்லியில் தற்போதுள்ள நாடாளுமன்ற கட்டிடம் 100 ஆண்டுகளை நிறைவு செய்ய உள்ளது. இதையொட்டி அதன் அருகே புதிய கட்டிடத்தை எழுப்புவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ரூ.971 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட் டுள்ளது.
2022-ம் ஆண்டில் நாட்டின் 75-வது சுதந்திர தினம் கொண்டாடப்படுவதற்கு முன்பு புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை எழுப்புவதற்கான பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு உள்ளது. தரை தளம், தரைக்கு கீழே ஒரு தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என மொத்தம் 4 தளங்களுடன் புதிய நாடாளுமன்றம் கட்டப்படுகிறது.
இந்த கட்டிடத்தில் மக்களவை உறுப்பினர்கள் 888 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும், மேல்சபை உறுப்பினர்கள் 384 பேர் இருக்கும் வகையில் இருக்கைகளும் அமைக்கப்படுகிறது. இதேபோல பல்வேறு தொழில்நுட்ப வசதிகளும், நவீன வசதிகளும் புதிய நாடாளுமன்றத்தில் அமைக்கப்படுகிறது.
இந்த கட்டிடம் நிலநடுக்கத்தால் பாதிக்காத வகையிலும் கட்டப்படுகிறது. இந்த கட்டிடத்தில் மொத்தம் 12 கதவுகள் அமைக்கப்படுகிறது. புதிய நாடாளுமன்ற கட்டிடம் நாட்டின் பன்முகத் தன்மையை வெளிப்படுத்தும் நோக்கில் அமைய உள்ளது.
ரூ.971 கோடி செலவில் கட்டப்படவுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார். நிகழ்ச்சியில் மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் பிரகலாத் வெங்கடேஷ் ஜோஷி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) ஹர்தீப் சிங் புரி மற்றும் மாநிலங்களவையின் துணை தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், செயலாளர்கள், வெளிநாட்டு தூதர்கள் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.