ஆ.ராசா என்ன பெரிய தலைவரா?.. கிண்டலடித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி

2 ஜி ஊழல் மூலம் உலகளவில் தமிழகத்தை தலைகுனிய வைத்தவர் ஆ.ராசா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், தன்னை விவாதத்திற்கு அழைக்கும் அளவுக்கு ராசா என்ன பெரிய தலைவரா என்றும் அவர் ஒரு சாதாரணமான ஆள் எனவும் கூறியுள்ளார்.

திருவாரூர், டிச-10

2ஜி ஊழல் வழக்கு குறித்து தன்னுடன் விவாதத்திற்கு வருமாறு இரண்டு நாட்களுக்கு முன் முதலமைச்சரை அழைத்திருந்தார் திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் முதல்வர் தற்போது பேசியிருக்கிறார்.

நிவர் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட வெள்ள சேதங்களை ஆய்வு செய்வதற்காக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில்,
ஆ.ராசாவிடம் வைட்டமின் ‘ப’ நிறைய உள்ளதால் அவரை இன்னும் கட்சியில் வைத்திருக்கிறார்கள் எனக் கூறினார். 2ஜி வழக்கில் சரியான ஆதாரங்கள் கொடுக்காததால் மட்டுமே ஆ. ராசா விடுவிக்கப்பட்டதாகவும் விசாரணை நடத்தி விடுவிக்கப்படவில்லை எனவும் கூறியிருக்கிறார். இப்போது மேல்முறையீடு வழக்கு விசாரணை நடந்து வருவதால் அதன் பின்னர் 2 ஜி வழக்கு குறித்து தெரியவரும் எனவும் தெரிவித்தார்.

திமுகவின் செலவுக்கு அவ்வப்போது பணம் தேவைப்படுதால் ஆ.ராசாவை கட்சியை விட்டு அனுப்பாமல் இன்னும் வைத்துள்ளதாகவும் ஆரம்பக்காலத்தில் ஆ.ராசா எப்படி இருந்தார் என்பதை சிந்தித்து பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்தார். இப்போது ஆ.ராசா எப்படி இருக்கிறார் என்பதையும் அவர் என்ன காரில் பயணிக்கிறார் என்பதையும் மக்கள் கவனித்துக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றும் கூறினார். ஆ.ராசாவின் பின்புலத்தை எடுத்தால் அவரது சுயரூபம் தெரியவரும் என்றும் வீணாக வேண்டாம் எனக் கருதுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *