வேளாண் சட்டங்களை ஆதரிப்பது ஏன்? – முதல்வர் விளக்கம்

திருவாரூர், டிச-10

நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் நிவர், புரெவி புயல், கனமழை ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை பார்வையிட்டார். பின்னர், திருவாரூர் மாவட்டம் தென்னவராயநல்லூரில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களில் எந்தச் சட்டத்தால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை திமுக தலைவர் கூறத் தயாரா? திமுக 2016-இல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “வேளாண் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான ஒரு புதிய கொள்கை உருவாக்கப்படும். இந்தக் கொள்கையின் அடிப்படையில், தமிழக வேளாண் உற்பத்திப் பொருள்களை இந்தியா மற்றும் சர்வதேச அளவில் சந்தைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்திருக்கிறது. அதைத்தான் மத்திய அரசு கொண்டு வந்திருக்கிறது.

விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடியது என்பதாலேயே வேளாண் சட்டங்களுக்கு தமிழக அரசு ஆதரவு தெரிவிக்கிறது. விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்க வேண்டும். விவசாயம் லாபகரமான தொழிலாக நடக்க வேண்டுமென்பதே தமிழக அரசின் விருப்பம்.

திட்டமிட்டு அரசியல் காழ்ப்புணர்வோடு இந்தச் சட்டங்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக எதிர்க்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், விவசாயிகள் உற்பத்தி செய்த விளைபொருள்களை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் கொண்டுசென்று விற்றுக் கொள்ளலாம்.
இது மிகவும் வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு கிடைத்த பெரிய வரப்பிரசாதம்.

8 வழிச் சாலைத் திட்டம் மத்திய அரசின் திட்டம். நிலம் எடுப்பதுதான் மாநில அரசின் பணி. திமுக ஆட்சியில், டி.ஆர். பாலு அமைச்சராக இருந்தபோது, சாலை அமைக்க நிலங்கள் எடுத்தார்கள். அப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படவில்லையா?

நாடு வளர்கின்றபோது, தொழிற்சாலைகள் வளர்கிறபோது போதிய சாலை வசதி தேவை. இதை ஒரு நீண்டகாலத் திட்டமாகப் பார்க்க வேண்டும். இதை நிறைவேற்ற 6 ஆண்டுகள் ஆகும். முன்னர், 100 வாகனங்கள் சென்று கொண்டிருந்த சாலையில் இப்போது கூடுதலாக 250 வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன. நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதற்கேற்ப சாலைகளை அமைத்தால்தான் நாம் அச்சமில்லாமல் பயணம் செய்ய முடியும்.

நிவர் புயல், கனமழையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் 6 பேர்; காயமடைந்தவர்கள் 12 பேர். நிவர் புயலால் 3,673 குடிசை வீடுகள், 725 ஓட்டு வீடுகள் என மொத்தம் 4,398 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. 381 ஆடு, மாடுகளும், 31,011 பறவைகளும் உயிரிழந்துள்ளன. நிவர் புயலால் 12,187 ஹெக்டேர் பாதிக்கப்பட்டது. தோட்டப் பயிர் ஏறத்தாழ 3,473 ஹெக்டேர் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.

புரெவி புயலால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். 4,534 குடிசை வீடுகளும் 927, ஓட்டு வீடுகளும் சேதமடைந்துள்ளன. கால்நடைகளைப் பொருத்தவரை, 219 ஆடு, மாடுகளும், 19,292 பறவைகளும் உயிரிழந்துள்ளன. புரெவி புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக 492 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 35 நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலம் 22,914 பேர் பயனடைந்துள்ளனர். புரெவி புயலால் 53,063 ஹெக்டேர் நெற்பயிரும், 13,250 ஹெக்டேரில் இதர பயிர்களும் பாதிக்கப்பட்டுள்ளன.

2ஜி அலைக்கற்றை முறைகேட்டின் மூலம் உலகரங்கில் இந்தியாவை தலைகுனிய வைத்தவர் ஆ.ராசா, சரியான ஆதாரம் கொடுக்காத காரணத்தால்தான் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, விசாரணையில் அவர் நிரபராதி என்று சொல்லவில்லை. இப்போது மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். வழக்கு வரும், அப்போது அவர் எங்கிருப்பார் என்று நாட்டு மக்கள் தெரிந்து கொள்வார்கள்.

நான் முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து அறிவிக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. எதை நிறைவேற்ற முடியுமோ அதைத்தான் சொல்லுவோம், நிறைவேற்றுவோம். அனைத்து சாதிப் பிரிவினருக்கும் மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வேலைவாய்ப்பு கிடைக்க எங்கள் அரசு துணை நிற்கும்.

இவ்வாறு முதல்வர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *