திமுகவில் கருணாநிதி குடும்பத்துக்கு மட்டும்தான் உயர்பதவிகள்.. அமைச்சர் S.P.வேலுமணி தாக்கு

கோவை, டிச-10

கோவை செல்வபுரத்தில் 79-வது வட்ட கழகம் சார்பில் பாசறை நிர்வாகிகள் அறிமுகக்கூட்டம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியபோது, “சிலுவம்பாளையம் கிராமத்தில் விவசாய குடும்பத்தில் பிறந்து கழகத்திற்காக அயராது உழைத்து படிப்படியாக முன்னேறி தமிழக முதல்வராகி புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழியில் சிறப்பான ஆட்சி செய்து வருகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. நானும் உங்களைப்போல் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு கட்சிக்காக உழைத்ததால் அமைச்சராகி உள்ளேன். பாசறையில் இணைந்துள்ள நீங்கள் கட்சிக்காக உண்மையாக பாடுபட்டால் உங்களை தேடி பதவிகள் வரும்.

வருங்காலங்களில் சட்டமன்ற உறுப்பினராகவோ, அமைச்சராகவோ வரமுடியும். இதெல்லாம் கழகத்தில் மட்டுமே நடக்கும். உழைப்பவர்களுக்கு உயர்வு தரும் கட்சி கழகம் மட்டும்தான். ஆனால் திமுகவில் கருணாநிதி குடும்பம் மட்டுமே உயர் பதவிகளை அடையும். புரட்சித்தலைவர் எம்ஜிஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் மாபெரும் இயக்கமாக செயல்பட்டு வரும் கழகம் ஜாதி சமுதாயத்திற்கு அப்பாற்பட்டது.

இன்று பாசறையில் இணைந்து உள்ளவர்களுக்கு கழகம் என்றும் உறுதுணையாக இருக்கும். பாசறையில் இணைந்துள்ள உங்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் கழகத்தில் உள்ளது. கழக ஆட்சியில் கடந்த 2011 முதல் இன்றுவரை மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு சுமார் ரூ.70 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் உதவி தரப்பட்டுள்ளது. இதனால் மகளிர் சொந்தத் தொழில் தொடங்கவும், வாழ்க்கைத் தரம் உயரவும் கழக அரசு துணை நின்றுள்ளது. இதற்கு முன்பு எத்தனையோ கட்சிகள் இருந்தாலும் கோவை மாநகருக்கு யாரும் இவ்வளவு திட்டங்களை நம்முடைய கழக அரசு போல் செயல்படுத்தியதில்லை!”

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *