நாகை மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் கொட்டும் மழையில் அமைச்சர் S.P.வேலுமணி ஆய்வு

நாகை, டிச-8

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவர், புரெவி புயல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்க நடவடிக்கை எடுக்கும் படி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். மேலும் இம் மாவட்டத்தில் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஓ.எஸ்.மணியன், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை விரைவுபடுத்தவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியிருந்தார்.

இதைத் தொடர்ந்து உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நாகை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக ஆய்வு மேற்கொண்டார். முதலில் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் ஒ.எஸ்.மணியன் விஜயபாஸ்கர் ஆகியோருடன் இணைந்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின்னர் நாகை மாவட்டம் இறையான்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியனும் சென்றிருந்தார்.

இரண்டாவது நாளாக புயல் மழையால் பாதிக்கப்பட்ட நல்லாடை முழையூர் உள்ளிட்ட பகுதிகளில் அமைச்சர் எஸ் பி வேலுமணி, ஓ எஸ் மணியன் ஆகியோர் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டனர். முழையூர் பகுதியில் கொட்டும் மழையில் குடை பிடித்தபடியே ஆய்வு செய்த அமைச்சர் எஸ்.பி.வேலுமணியிடம், மழை நீர் தேங்கியதால் அழுகிய நெற்பயிர்களை விவசாயிகள் கொண்டு வந்து காட்டினர்.

மழை நீர் வடிவதற்கான பகுதிகள் குறித்து அவர்களிடம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டறிந்ததுடன், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பார் என்று உறுதி அளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி வேலுமணி, நாகை மாவட்டத்தைப் பொறுத்தவரை கஜா புயல் காலத்திலேயே நாங்கள் 1 மாதம் தங்கியிருந்து, நிவாரணப் பணிகளை மேற்கொண்டோம்.

நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள நாகப்பட்டினம், கீழ்வேளுர், வேதாரண்யம், திருக்குவளை, மயிலாடுதுறை, தரங்கம்பாடி, சீர்காழி மற்றும் குத்தாலம் ஆகிய 8 வட்டங்களிலும் ஒவ்வொரு வட்டத்திற்கும் இடம் பெயர்தல் குழு, தேடுதல் மற்றும் மீட்புக்குழு மற்றும் தங்குமிடம் மற்றும் பராமரிப்புக் குழு என தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, காவல்துறை, சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை, பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்), மின்சாரத்துறை, வனத்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினைச் சோ்ந்த அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு 24 குழுக்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 பல்நோக்கு நிவாரண மையங்கள், 22 – புயல் பாதுகாப்பு மையங்கள் உட்பட 191 முகாம்களில் 60583 நபர்கள் தங்களது குடியிருப்புகளிலிருந்து வெளியேற்றப்பட்டு பத்திரமாக தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

புரெவி புயலின் காரணமாக 1,001 குடிசைவீடுகள் பகுதி சேதமடைந்தும், 37 குடிசைவீடுகள் முழுவதும் சேதமடைந்தும் உள்ளன. 95 ஓட்டுவீடுகள் பகுதி சேதமடைந்துள்ளன. புரெவி புயலின் காரணமாக சீர்காழி வட்டத்தில் 2 நபர்களும், நாகப்பட்டினம் வட்டத்தில் 1 நபரும் உயிரிழந்துள்ளனர்,மேலும் 2 நபர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது. உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் விபத்து ஏற்ப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரண தொகை பெற்றுத் தர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சேதமடைந்த வீடுகளுக்கும், உயிரிழந்த கால்நடைகளுக்கும் அரசு விதிகளின்படி உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

கனமழையினால் 60,000 ஹெக்டேர் பரப்பளவிலான சம்பா, தாளடி பருவ நெற்பயிற் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளது. 172 இடங்களில் ஆறுகள், ஏரிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அனைத்துத்துறைகளும் மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *