தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்களை கொண்டாடுவதில்லை ஏன்?.. நீதிபதிகள் வேதனை..!
தமிழகத்தில் பெருமைமிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படாதது வேதனை அளிப்பதாக உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரை, டிச-8

கோயமுத்தூர் அரண் பணி அறக்கட்டளை இயக்க செயலாளர் தியாகராஜன் என்பவர் ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க அனுமதிக் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். மேலும் கும்பகோணம் உடையாலுரில் ராஜராஜ சோழனின் வரலாற்று பெருமைகளை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னம் அமைக்கக் கோரியும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜராஜ சோழன் சமாதியை சீரமைக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் மகாராஷ்டிராவில் ஆட்சி செய்த மன்னர்களை அங்குள்ள மக்கள் கொண்டாடுகின்றனர் என்று தெரிவித்த நீதிபதிகள் மன்னர் சிவாஜியை மும்பையில் கொண்டாடுவதைப் போல் தமிழகத்தில் மன்னர்களை கொண்டாடுவதில்லை ஏன் என கேள்வி எழுப்பினர். தொடர்ந்து, தமிழகத்தில் பெருமை மிக்க தமிழ் மன்னர்கள் கொண்டாடப்படுவது இல்லை என்று வருத்தம் தெரிவித்த நீதிபதிகள்,வழக்கு தொடர்பாக சுற்றுலா, சுகாதாரத்துறை செயலர், அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.