சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான தடை செல்லும்.. உச்சநீதிமன்றம் தீர்ப்பு..!

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடை செல்லும் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

டெல்லி, டிச-8

சேலம்-சென்னை இடையே சாலை போக்குவரத்தை மேம்படுத்த அதிவிரைவு சாலைகள் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டன. மத்திய அரசின், ‘’பாரத்மாலா’’ திட்டத்தின் கீழ் ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பில் சேலம்-சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த 8 வழிச்சாலை திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் 1900 ஹெக்டேர் பரப்பளவு நிலத்தை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பாணை வெளியிட்டது. இதனால் ஏராளமான விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதாக விவசாயிகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, 8 வழிச்சாலை திட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து, கடந்த ஆண்டு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஏ.எம். கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டது. கடந்த அக்டோபர் 2ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று காலை தீர்ப்பு வழங்கி உள்ளது. அந்த தீர்ப்பில், ‘8 வழிச்சாலை திட்டம் தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. சென்னை – சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த விதிக்கப்பட்ட தடை தொடரும். ஆனால், சென்னை – சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த அனுமதி அளிக்கப்படுகிறது. புதிய அறிவிக்கை வெளியிட்டு நிலங்களை கையகப்படுத்தலாம். 8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. ஏற்கனவே நடைபெற்ற நிலம் கையகப்படுத்தல் நடவடிக்கை செல்லாது. மீண்டும் நிலம் கையகப்படுத்த புதிய அரசாணையை வெளியிட வேண்டும். உரிய துறைகளில் அனுமதி பெற்று வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 8 வழிச்சாலை திட்டத்தை புதிதாக தொடங்கலாம். நெடுச்சாலை அமைப்பது தொடர்பாக சுற்றுச்சூழல் துறையிடம் உரிய அனுமதி பெறவேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்கிறோம்.’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *