நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் போராட்டம்..!

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் இன்று நடைபெற்று வருகிறது.

டெல்லி, டிச-8

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய வேளாண் சட்டங்கள் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே இதுவரை நடந்த 5 சுற்று பேச்சு வார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மாநில விவசாயிகள் போராட்டம் இன்று 13-வது நாளாக நீடித்தது.
விவசாயிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே நாளை (புதன்கிழமை) மீண்டும் 6-வது முறையாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்தநிலையில் புதிய திட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) “பாரத் பந்த்” என்ற பெயரில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்தனர்.

இந்த போராட்டத்துக்கு காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், தி.மு.க., தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, பகுஜன் சமாஜ், சிவசேனா, ஆம் ஆத்மி கட்சி, சமாஜ்வாடி, ஜார்க்கண்ட் முக்தி மோட்சா, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு உள்பட 24 கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன. மேலும் ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., எச்.எம்.எஸ். உள்பட 10 மத்திய தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து ஆதரவு தெரிவித்து உள்ளன.

மேலும் வங்கி ஊழியர்கள், அகில இந்திய ரெயில்வே பணியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் இந்திய ரெயில்வே பணியாளர்கள் தேசிய கூட்டமைப்பு ஆகிய 2 ரெயில்வே சங்கங்கள், மாநில அரசு ஊழியர் சங்கங்கள், மாணவர்கள், பெண்கள் அமைப்புகள், விவசாய அமைப்புகள் இன்று நடத்தும் “பாரத் பந்த்” போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.

இன்று காலை விவசாயிகள் அறிவித்தப்படி நாடு முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், மேற்கு வங்கம், கேரளா, ஜார்க்கண்ட், ஆந்திரா, தெலுங்கானா, மராட்டியம், சத்தீஷ்கர் மற்றும் புதுச்சேரி ஆகிய 11 மாநிலங்களில் முழு அடைப்பு போராட்டம் முழுமையாக இருந்தது.

பெரும்பாலான மாநிலங்களில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. வாகன போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன.

டெல்லி புறநகர்களில் குவிந்துள்ள விவசாயிகள் இன்று காலை முதலே முக்கிய சாலைகளில் குவிந்தனர். 10 மணி அளவில் டெல்லிக்குள் செல்லும் அனைத்து வாகனங்களையும் தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் டெல்லியை நோக்கி வந்த வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். மும்பை, லக்னோ உள்பட பல நகரங்களில் விவசாயிகள் மற்றும் எதிர்கட்சியினர் சாலை மறியலால் போக்குவரத்து முடக்கம் ஏற்பட்டது.

பஞ்சாப் மாநிலத்தில் இன்று அனைத்து விவசாய சங்கங்களும் முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. ஓட்டல்கள் செயல்படவில்லை. அரசு அலுவலகங்களிலும் பெரும்பாலான பணியாளர்கள் வரவில்லை. இதனால் பஞ்சாப் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் மிக தீவிரமாக காணப்பட்டது. சாலைகளில் தடுப்புகள் ஏற்படுத்தி விவசாயிகள் போராட்டம் செய்தனர்.

குஜராத் மாநிலத்தில் 3 இடங்களில் விவசாயிகள் சாலை மறியல் செய்தனர். ரோடுகளில் டயர்களை எரித்து போக்குவரத்துக்கு இடையூறு செய்தனர். குஜராத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் போராட்டம் நடத்த வந்த விவசாயிகள், அரசியல் கட்சி தலைவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டனர்.

மராட்டிய மாநிலம் மும்பையில் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா கட்சிகளும் போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். இதனால் பெரும்பாலான சாலைகளில் போக்குவரத்து முடங்கியது.

விவசாயிகளின் பொது வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் இயங்கி வரும் 850 காய்கறி கடைகள் மூடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு ஆதரவாக திருவாரூர் மாவட்டத்தில் 22,000 கடைகள் அடைக்கப்பட்டு உள்ளன.

காலை 11 மணிக்கு தொடங்கும் பந்த் மாலை 3 மணியுடன் முடிவடைகிறது. போராட்டத்தின் போது, விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலைகளையும், சுங்க சாவடிகளையும் முடக்கப் போவதாக அறிவித்துள்ளனர். பந்த் போராட்டத்தையொட்டி டெல்லியில் அனைத்து எல்லைகளும் மூடப்பட்டுள்ளன. அங்கு தடுப்புகள் அமைத்து போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *