விருதுநகரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மை எரிப்பு.. திமுக, அதிமுக கடும் மோதல்..!

விருதுநகர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விருதுநகர், டிச-7

சேலத்தில் டிசம்பர் 1ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “2ஜி ஒதுக்கீட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் கொள்ளையடித்த கட்சி திமுக. மெகா ஊழல் செய்துவிட்டு புத்தர், அரிச்சந்திரன் போல் பேசி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் விரைவில் 2ஜி வழக்கில் சிக்குவார்” என விமர்சித்துப் பேசினார்.

2ஜி வழக்கில் சிக்கி சிறை சென்று பின்னர் விடுதலையான திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா முதல்வரின் விமர்சனத்துக்கு பதில் அளித்தார். “2ஜி குறித்து விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். கோட்டையில் வைத்து நேருக்கு நேர் விவாதிக்க முதலமைச்சர் தயாரா? அட்டார்னி ஜெனரல் உட்பட யாரை வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளட்டும். நான் தயாராக இருக்கிறேன் என சவால் விடுத்தார்.

இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி “முதல்வரை ஏன் கூப்பிடுகிறாய்? எங்கு வரவேண்டும்? நான் வருகிறேன். ராசாவுடன் ஆனாலும் சரி, ஸ்டாலினுடன் ஆனாலும் சரி. ஊழல் செய்தாயா இல்லையா? சர்க்காரியா கமிஷனால் குற்றம்சாட்டப்பட்ட கட்சி தானே திமுக.” எனத் தெரிவித்திருந்தார்.

அமைச்சரின் இந்த பதில் திமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கண்டித்து விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் அவரின் உருவ பொம்மையை எரித்து திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் தடுத்துநிறுத்தி அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உருவ பொம்மையை எரிக்க முயன்ற திமுகவினரை தடுக்க முற்பட்டபோது போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. விருதுநகரில் அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்க திமுகவினர் முயன்றனர். அப்போது அதிமுகவினரும் அங்கு குவிந்தனர். இரு தரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. தகவலறிந்த போலீசார் சுற்றி வளைத்து உருவ பொம்மையைப் பறித்துச் சென்றனர். தொடர்ந்து திமுகவினருக்கும் போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதமும் தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.

அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியின் உருவப்படங்களை திமுகவினர் தீயிட்டு எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அமைச்சரின் உருவ பொம்மையை எரிக்கும் தகவலறிந்து அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் விஜயகுமாரன், ஒன்றியச் செயலர்கள் தர்மலிங்கம், கண்ணன் மற்றும் அதிமுகவினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

அப்பொழுது திமுக தலைவர் ஸ்டாலின் உருவ பொம்மையை அதிமுகவினர் எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி உருவ பொம்மையை பறிமுதல் செய்தனர்.

திமுகவினரை கண்டித்து அதிமுகவினரும் குவிந்ததால் விருதுநகரில் பரபரப்பு ஏற்பட்டது. பாதுகாப்பு கருதி நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராஜபாளையத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் உருவ பொம்மையை அதிமுகவினர் தீயிட்டு எரித்தனர். அப்போது திமுகவினருக்கு அதிமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர்.

இதுபோன்ற போராட்டங்களால் விருதுநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. முக்கிய சாலைகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *