‘ரூட் தல’ மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை
பேருந்தில் கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள் ‘ரூட் தல’ என்ற பெயரில் அத்துமீறலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வடசென்னை காவல் இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
சென்னை, டிச-7

கொரோனா பரவல் காரணமாக பல மாதங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகள் இன்று திறக்கப்படுகின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மாணவர்கள் கல்லூரிக்கு வருவதால், பேருந்துகளில் கொண்டாட்டம் என்ற பெயரில் ரகளையில் ஈடுபடவும் வாய்ப்பு உள்ளது.
இந்நிலையில், ரூட்தல என்றபெயரில் ரகளையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட சென்னை காவல்இணை ஆணையர் வி.பாலகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ‘‘பேருந்து வழித்தடங்களில் ‘ரூட் தல’ என்ற பெயரில் ஒரு கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, பேருந்து கூரையில் பயணம் செய்வது, படிகளில் தொங்கி சாகசம் செய்வது போன்ற அராஜக செயல்களில் மாணவர்கள் ஈடுபடக் கூடாது.அவ்வாறு செயல்படும் மாணவர்கள் மற்றும் மாணவர் போர்வையில் செயல்படும் சமூக விரோதிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். படிப்பில் மட்டுமே மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும்’’ என்றார்.