அமெரிக்காவில் யாதும் ஊரே திட்டம் – எடப்பாடியார்
நியூயார்க் செப்டம்பர் 4 : உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் யாதும் ஊரே திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14 நாள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளார். இன்று நியூயார்க் நகரில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் தொழில் தொடங்க 16 நிறுவனங்களுடன் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்து தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானதாக அரசின் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் 20,000-க்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு, இளைஞர்கள் பயன்பெறுவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அமெரிக்காவில் யாதும் ஊரே திட்டத்தை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய முதல்வர் பழனிசாமி, உலகமெங்கும் உள்ள தமிழ் மக்கள், தமிழ் சங்கங்கள், தொழில் அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தும் வகையில் யாதும் ஊரே திட்டம் தொடங்கப்பட்டது. முதலீடுகளை ஈர்க்க உதவும் வகையில் ரூ.60 கோடியில் யாதும் ஊரே இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் முதலீடு ஆலோசனைகள் நேரடியாக தமிழ்நாடு அரசை வந்தடையும், நீங்கள் தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்ய விரும்பினால் அதற்கான வழிமுறைகளை எடுத்து கூறி ஒற்றை சாளர முறையில் அனைத்து அனுமதியும் அரசு வழங்கும்.
இவ்வாது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.