அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழை…
சென்னை, அக்டோபர்-24
தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் அடுத்த 2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்தரன் பேசியதாவது, மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது வடக்கு ஆந்திர பகுதியில் நிலவுகிறது. நேற்று மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, அடுத்து வரும் 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அதனை தொடர்ந்து புயலாக வலுபெறுவதற்கும் வாய்ப்புள்ளது கடந்த 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுவையில் அதிகபட்சமாக, கடலூர் மாவட்டம் கீழ செருவையில் 15 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 2 நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுவையின் அநேக இடங்களில் மிதமான மழையும், குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்கள், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு உள்ளது பாலச்சந்தரன் தெரிவித்தார்.