ரஜினி கட்சி அறிவிப்பு.. ஓ.பி.எஸ். – ஈ.பி.எஸ். கருத்து வேறுபாடு..!!

ரஜினி கட்சி தொடங்குவது குறித்து அறிவித்த விவகாரத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இடையே வேறுபாடான கருத்துகள் வந்துள்ளன.

சென்னை, டிச-5

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 2017-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி அறிவித்தார். ஆனால், கட்சி தொடங்காமல் 3 ஆண்டுகளைக் கடத்திய அவர் திடீரென நேற்று முன்தினம் காலையில் ஜனவரியில் கட்சி தொடக்கம், டிச.31-ம் தேதி அறிவிப்பு என ட்விட்டரில் அறிவித்துப் பின்னர் தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். தமிழகத்தின் தலை எழுத்தை மாற்ற வேண்டும், அனைத்தையும் மாற்ற வேண்டும், இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை என்று பேசி தனது மக்கள் மன்றத்துக்குத் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுனமூர்த்தி என்கிற முன்னாள் பாஜக நிர்வாகியை நியமித்து அறிமுகப்படுத்தினார். பின்னர் தமிழருவி மணியனை மேற்பார்வையாளராக நியமித்தார்.

இதனிடையே ரஜினி கட்சி தொடங்கும் அறிவிப்பு குறித்து தேனியில் ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, அவர் கட்சி ஆரம்பித்ததை வரவேற்பதாகவும், எதிர்காலத்தில் எதுவும் நடக்கும் என்றும், ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

சிவகங்கையில் முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் ரஜினியின் கட்சி அறிவிப்பு குறித்துக் கேட்டபோது, “ரஜினி கட்சியைப் பதிவு செய்யட்டும். அதற்குப் பிறகு கேளுங்கள். அவர் அறிவிப்பு மட்டுமே செய்துள்ளார். ரஜினி, கட்சியைப் பதிவு செய்தவுடன் வந்து கேளுங்கள். நான் பதில் சொல்கிறேன். அதுதான் சரியாக இருக்கும். ஓபிஎஸ் அவரது கருத்தைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்கும் கருத்துச் சொல்ல உரிமை உள்ளது” என்று தெரிவித்தார்.

ரஜினியின் கட்சி அறிவிப்பு விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கருத்துகள் வெவ்வேறு விதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *