கனமழையால் வெள்ளக்காடான கடலோர மாவட்டங்கள்..! விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியதால் விவசாயிகள் பாதிப்பு..!!

சென்னை, டிச-5

புரெவி புயல் காரணமாக நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் தமிழக கடலோர மாவட்டங்கள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் ஏக்கர் விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கி சேதம் அடைந்துள்ளது. சென்னையிலும் பெரும்பாலான இடங்கள் மிதக்கின்றன. நேற்று மட்டும் மழைக்கு 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும், அடுத்த இரண்டு நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து நவம்பர் இரண்டாவது வாரத்தில் இருந்து தமிழகத்தில் மழையும் தீவிரமாக பெய்யத் தொடங்கியது. நவம்பரில் நிவர் புயலை சந்தித்த தமிழகம் தற்போது இரண்டாவதாக புரெவி புயலையும் எதிர்கொண்டுள்ளது. அந்தப் புயல், நேற்று முன்தினம் வலுப்பெற்று மன்னார் வளைகுடாவுக்குள் நுழைந்து இலங்கை மற்றும் தென் தமிழகத்தில் கனமழையை கொட்டித் தீர்த்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 360மிமீ மழை கொட்டித் தீர்த்துள்ளது.

சென்னையில் நேற்றுமுன்தினம் முதல் நேற்று காலை வரை தொடர்ந்து மழை கொட்டியது. நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வடசென்னையில் பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. குடியிருப்புகளுக்குள்ளும் புகுந்தது. திருவொற்றியூர், தண்டையார்பேட்டை, பெரம்பூர், கொடுங்கையூர், வியாசர்பாடி, படாளம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதேபோல, நகரின் முக்கிய பகுதியான மாம்பலம், கே.கே.நகர் மற்றும் வேளச்சேரி, பள்ளிக்கரணை, முடிச்சூர், தாம்பரம், சேலையூர், கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகள் தண்ணீரில் மிதக்கிறது. இந்தப் பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியில் வர முடியாமல் தவித்தனர். சாப்பாடு, மின்சாரம், குடிநீர் இல்லாமல் அவதிப்பட்டனர். புறநகரில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டதால், உபரி நீர் வெளியேறி குடியிருப்புக்குள் புகுந்து விட்டன.

அதேபோல மந்தைவெளி, தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பஸ் நிலையங்களுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்கள் பெரிதும் அவதிப்பட்டனர். சென்னைக்கு குடிநீர் வழங்கும் அனைத்து ஏரிகளும் நிரம்பிவிட்டன. செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் அடையாறு ஆறு உள்ளிட்ட பல்வேறு நீர் நிலைகளிலும் தண்ணீர் ஓடுகிறது. இதனால் நகருக்குள் வெள்ளம் வடியாமல் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். சென்னையில் நேற்று மட்டும் 2 பேர் மழைக்கு பலியாகியுள்ளனர்.

கடந்த 1ம் தேதி இரவு முதல் புதுவையில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நேற்று இரவு முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கியுள்ளது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. விளை நிலங்களை தண்ணீர் சூழ்ந்ததால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கினர். தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் இன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நிலை கொண்டு இருந்த புரெவி புயல் நேற்று முன்தினம் இரவே வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டு இருந்தது. இந்நிலையில் தரைக்காற்று எதிர்கொண்டு வீசியதால் கரையைக் கடப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மன்னார் வளைகுடா பகுதியில் நேற்று இரவு வரை நிலை கொண்டு இருந்தது. பின்னர் அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டமாக மாறியுள்ளது. இதையடுத்து, இன்று மதியம் அது மேலும் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும். இதையடுத்து, மேற்கு மற்றும் தென் மேற்கு திசையில் நகர்ந்து வேதாரண்யம்-புதுக்கோட்டை இடையே மேற்கு நோக்கி நகர்ந்து செல்லும். இன்று மாலை திண்டுக்கல்-மணப்பாறை-வேடச்சந்தூர் இடையே மேற்கு நோக்கி நகர்ந்து சென்று அரபிக்கடலுக்கு செல்லும்.

இந்த நிகழ்வின் காரணமாக நீலகிரி, தேனி, திண்டுக்கல், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை முதல் மிக கனமழை வரை பெய்யும். இது தவிர திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், சேலம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும். பிற மாவட்டங்களில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு லேசான மழையும், சில நேரங்களில் கனமழையும் பெய்யும். வட கிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் முதல் நேற்று வரை பெய்த மழை அளவை பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் 36 செ.மீ மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 1 செமீ குறைவு.

மேற்கண்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்க நகர்ந்து செல்லும் வரையில் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும். முன்னதாக கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்கள் அனைத்தும் மழை நீரால் சூழப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங்களில் 1 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில், காற்றத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி செல்லும் வரை பெய்யும் மழையால் மேலும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *