கலப்படமற்ற தேனுக்கான சோதனையில் தோல்வியடைந்த டாப் 10 முன்னணி நிறுவனங்கள்..!
அசல் தேன் எனக் கூறி அதிக விலையுடன் விற்பனை செய்யும் நிறுவனங்களின் தேனில் கலப்படம் என்ற தகவல் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி, டிச-3

நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய பல தூய்மை சோதனைகள் உள்ளன. அவ்வகையில், சமீபத்தில் சில பிரபலமான பிராண்டுகளால் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டுவரும் தேன், தூய்மைக்கான பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் நடத்திய இந்த சோதனையில், பல நிறுவனங்களின் தேனில் செயற்கை சர்க்கரை பாகை கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது.
மூலக்கூறு மட்டத்தில் ஒரு பொருளின் கலவையை அறிவதற்கான இந்த சோதனை (என்எம்ஆர் சோதனை) ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் செய்யப்பட்டுள்ளது. தேனை ஏற்றுமதி செய்ய விரும்பும் இந்திய நிறுவனங்களுக்கு இந்த சோதனை தேவைப்படுகிறது.
அந்த வகையில் டாபர், பதஞ்சலி, பைத்யநாத் மற்றும் ஜண்டு உள்ளிட்ட 13 முன்னணி பிராண்டுகளின் மூல மற்றும் பதப்படுத்தப்பட்ட தேன் என்எம்ஆர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அதில் பதஞ்சலி, டாபர், சண்டு, அபிஸ் ஹிமாலயா, ஹை ஹனி உள்ளிட்ட 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவற்றில், சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சர்க்கரை பாகுகள் கலந்திருப்பதாக சிஎஸ்இயின் உணவு பாதுகாப்பு மற்றும் நச்சு குழுவின் திட்ட இயக்குனர் அமித் குரானா தெரிவித்தார்.
சபோலா, மார்க்பெட் சோனா, சொசைட்டி நேச்சுரல் ஆகிய 3 நிறுவனங்களின் தேன் கலப்படமற்ற தேன் என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேன் பொதுவாக உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடிய ஒரு பொருள். தற்போது தொற்றுநோய் பரவி வரும் நிலையில் தொற்றுநோயை எதிர்த்து போராடும் குணம் தேனுக்கு இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால், அதனுடன் சர்க்கரை சேர்ந்தால் உடலுக்கு ஆரோக்கியம் இல்லை என்கின்றனர் மருத்துவர்கள்.
பொதுவாக இந்தியாவில் சுத்தமான தேன் என்று விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய இந்த பரிசோதனை தேவையில்லை. ஆனால், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டுமானால் நிச்சயம் இந்தப் பரிசோதனையில் வெற்றி பெற்றாக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.