முதல் போட்டியிலேயே அசத்தல்.. மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு தலைவர்கள் பாராட்டு மழை..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அறிமுக போட்டியிலேயே அசத்திய டி நடராஜனுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்., முக ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சென்னை, டிச-2

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் டி நடராஜன் அறிமுகம் ஆனார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட் வீழ்த்தினார். கடைசி நேரத்தில் சிறப்பான யார்க்கர் பந்து வீச்சால் கடைசி நேரத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்டோர் நடராஜனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்படி பழனிசாமி டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்தியாவிற்கான தன் முதல் போட்டியிலேயே, சவால்கள் நிறைந்த சூழ்நிலையிலும் தன் முத்திரையைப் பதித்து, தன் சர்வதேசப் பயணத்தை வெற்றியுடன் துவக்கியிருக்கும் நம் மண்ணின் மைந்தன் நடராஜனுக்கு வெற்றிகள் மென்மேலும் வந்து சேர வாழ்த்துகிறேன். @Natarajan_91 #AUSvsIND’’ எனப் பதிவிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், #AUSvsIND கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக தனது முதல் வெற்றிப்பயணத்தை துவங்கியிருக்கும் தமிழக வீரர் திரு.நடராஜன் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்! தனது அபாரத் திறமையால் தாய்நாட்டிற்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் @Natarajan_91 அவர்களின் சாதனைப்பயணம் தொடரட்டும்! என கூறியுள்ளார்.

முக ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘#TeamIndia கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர்
@Natarajan_91. அவர்களுக்கு வாழ்த்துகள்!
வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!’’ எனப் பதிவிட்டுள்ளார்.

உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சார்பில் களமிறங்கியுள்ள தமிழக வீரர் @Natarajan_91 பங்கேற்ற முதல் போட்டியிலேயே விக்கெட் வீழ்த்தி தனது சாதனை பயணத்தை துவங்கியுள்ளார், அவர் இன்னும் பல சாதனைகள் படைத்து தமிழகத்திற்கு பெருமை சேர்க்க மனதார வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *