ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு ஆறுதல் வெற்றி..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தை இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதல் சர்வதேச போட்டியிலேயே தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கான்பெர்ரா, டிச-2

ஆஸ்திரேலியா – இந்தியா மோதிய 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய அணியின் ஆடும் லெவனில் தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி. நடராஜன் சேர்க்கப்பட்டார். இதன்மூலம் சர்வதேச போட்டியில் இன்று அறிமுகமானார். இதேபோல் ஷர்துல் தாகூரும் ஆடும் லெவனில் இடம்பெற்றார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள் விளாசினார். அதிரடியாக ஆடிய ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்காமல் 76 பந்துகளில் 92 ரன்கள் குவித்தார். இதேபோல் அவருக்கு இணையாக அதிரடி காட்டிய ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த ஜோடி 150 ரன்கள் குவித்தது இந்தியாவுக்கு மிகப்பெரிய உறுதுணையாக இருந்தது.

இதையடுத்து 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு ஆஸ்திரேலிய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியின் ஆரோன் பிஞ்ச் – லாபஸ்சேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். லாபஸ்சேன்-ஐ க்ளீன் போல்டாக்கி வெளியேற்றினார் டி நடராஜன். இதனால் 6 ஓவருக்குள் ஆஸ்திரேலியா முதல் விக்கெட்டை இழந்தது. அடுத்து வந்த நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்மித், ஷர்துல் தாகூர் பந்தில் வீழ்ந்தார்.
முன்னணி பேட்ஸ்மேன்கள் இருவர் வெளியேற ஆஸ்திரேலியா திணற ஆரம்பித்தது. கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒரு பக்கம் நிலைத்து நின்று ஆடினார். அவர் 75 ரன்கள் எடுத்து வெளியேறினார். ஹென்ரிக்ஸ் 22, க்ரீன் 21 ரன்னிலும் வெளியேறினர்.

இதனால் ஆஸ்திரேலியா தோல்வியை நோக்கிச் சென்றது. ஆனால் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல் களம் இறங்கியதில் இருந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்திய அணியின் வெற்றிக்குப் பெரிய தடையாக இருந்த மேக்ஸ்வெல், பும்ரா பந்துவீச்சில் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசியில் நன்கு பந்துவீசிய நடராஜன், அகரை 28 ரன்களில் வெளியேற்றினார். தனது முதல் ஒருநாள் ஆட்டத்தில் 10 ஓவர்கள் வீசி 70 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகள் எடுத்தார் நடராஜன்.

ஆஸ்திரேலிய அணி, 49.3 ஓவர்களில் 289 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஷர்துல் தாக்குர் 3 விக்கெட்டுகளையும், நடராஜன், பும்ரா தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப், ஜடேஜா தலா 1 விக்கெட்டையும் எடுத்தார்கள்.

முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால் தொடரை வென்றது. இந்தியா ஆறுதல் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் பும்ரா 43 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், நடராஜன் 70 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டும், ஷர்துல் தாகூர் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *