இன்னும் 8 அமைச்சர்கள் வெளிநாடு பயணம் – ஸ்டாலின்
சென்னை செப்டம்பர் 4 :தமிழக அமைச்சர்கள் இன்னும் 8 பேர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடந்த திருமண விழாவில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சி 5 சதவீதத்துக்கு கீழே சென்றுள்ளது. இது 27 ஆண்டு காலமாக இல்லாத கொடுமை இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் இந்த செய்திகளை கூட ஊடகங்களில் பெரிதாக பார்க்க முடியவில்லை. சமூக வலைதளங்களில் தான் அதிகம் இது போன்ற தகவல்கள் வெளியாகிறது. இதையெல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான் முன்னாள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரத்தின் கைது நடவடிக்கை நடந்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளி நாட்டுக்கு சென்று தொழில் முதலீடுகளை கொண்டு வர போய் உள்ளார் என்கிறார்கள். முதல்-அமைச்சர் மட்டும் போய் இருந்தால் மக்கள் ரசிப்பார்கள். வாழ்த்துவார்கள். ஆனால் ஒரு அமைச்சரவையே போய் உள்ளது. இன்னும் 8 அமைச்சர்கள் வெளிநாடு போக இருக்கிறார்களாம். எனவே சுற்றுலா அமைச்சரவையாக அ.தி.மு.க. ஆட்சி மாறி இருக்கிறது. வெளிநாடு செல்லட்டும் வேண்டாம் என்று சொல்ல வில்லை. ஆனால் இதே தமிழ்நாட்டில் ஜெயலலிதா முதல்-அமைச்சராக இருந்த போது முதல் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்தது. அந்த மாநாட்டில் ரூ.2.42 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டை பெற்றோம் என்று புள்ளி விவரத்தை தெரிவித்து, 98 புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போட்டதாக கூறினார்கள்.
ஜெயலலிதா மறைந்ததற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆனதும் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார். இதில் சுமார் ரூ.3 லட்சம் கோடி அளவுக்கு முதலீடு வந்ததாக தெரிவித்தனர். இரண்டையும் கூட்டி பார்த்தால் ரூ.5 லட்சம் கோடி அளவு முதலீடு வந்தாக பார்க்கிறோம்.
ஆகவே எவ்வளவு முதலீட்டை தமிழகம் பெற்றுள்ளது. அதில் எவ்வளவு பேர் தொழில் தொடங்க முன் வந்துள்ளனர்? அதன் மூலம் எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. இதை ஒரு வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்தில் பேசினேன். ஆனால் இதுவரை அதை வெளியிடவில்லை.இந்த நிலையில் நீங்கள் வெளிநாட்டுக்கு போய் முதலீடுகளை ஈர்க்க போவதாக கூறி வருகிறீர்கள். நாங்கள் கேட்பது, ஏற்கனவே இருந்த நிலை என்ன? என்பதுதான். இப்போது 16 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போட்டதாக செய்தி வருகிறது. இவை அனைத்தும் அறிவிப்புகளாக இருக்கிறதே தவிர உண்மையிலேயே செயல்படுத்தும் நிலையில் இருக்கிறதா?
இவ்வாறு திமுக தலைவர் மு.கஸ்டாலின் பேசினார்.