விவசாயிகள் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஆதரவு.. இந்தியா கடும் கண்டனம்

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்துக்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்துள்ளார். அவரது கருத்து தேவையற்றது என இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

டெல்லி, டிச-2

இந்தியாவில் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் முதல் வெளிநாட்டைச் சேர்ந்த தலைவராக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து தெரிவித்துள்ளார். சீக்கிய மத குரு குருநானக் தேவின் 551-ஆவது பிறந்த தினத்தையொட்டி கனடாவின் டொரன்டோ நகரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழாவில் காணொலி வாயிலாக அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பேசியதாவது:-

விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் குறித்து இந்தியாவிலிருந்து வெளிவரும் செய்திகளை அங்கீகரிக்காவிட்டால் நான் பொறுப்பற்றவனாகிவிடுவேன். அங்கு நிலவும் நிலைமை கவலைக்குரியது. விவசாயிகளின் குடும்பத்தினர், நண்பர்கள் பற்றி நாம் அனைவரும் கவலைப்படுகிறோம். அமைதியான போராட்டத்தின் உரிமையைப் பாதுகாக்க கனடா எப்போதும் துணை நிற்கும். பேச்சுவார்த்தையின் முக்கியத்துவத்தை நாங்கள் நம்புகிறோம். அதனால்தான் எங்களது கவலைகளை பல்வேறு வழிகளில் இந்திய அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்கிறோம் என்றார் அவர்.

இந்த காணொலி உரையை தனது ட்விட்டர் பக்கத்திலும் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ளார்.

இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஏராளமானோர், பெரும்பாலும் பஞ்சாபை சேர்ந்தவர்கள் கனடாவில் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, கனடா பிரதமரின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது:-

இந்தியாவில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டம் தொடர்பாக முழுமையான தகவல்களைத் தெரிந்து கொள்ளாமல் கனடாவைச் சேர்ந்த தலைவர்கள் கருத்து தெரிவிப்பதைக் காண்கிறோம். ஒரு ஜனநாயக நாட்டின் உள்விவகாரங்கள் குறித்த இதுபோன்ற கருத்துகள் தேவையற்றவை. ராஜாங்கரீதியான பேச்சுகள் அரசியல் காரணங்களுக்காக தவறாக சித்திரிக்கப்படாமல் இருப்பது சிறந்தது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *